செய்திகள்

எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் முடங்கியது

Makkal Kural Official

புதுடெல்லி, ஜூலை 22–

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதனால் 2வது நாளாக நாடாளுமன்ற முடங்கியது.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளே மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனிடையே நேற்றிரவு மருத்துவக் காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு துணை ஜனாதிபதி தன்கர் கடிதம் எழுதினார். இந்தச் செய்தி எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் 2வது நாளாக நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் இன்று காலை கூடியது.

சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும் ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் உட்பட முக்கிய பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பின. குறிப்பாக, இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் மூன்றாம் தரப்பின்(அமெரிக்கா) பங்களிப்பு குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினர்.

கேள்வி நேரம் தொடர அனுமதிக்குமாறும் ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஏற்கெனவே உறுதி அளித்தபடி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றம் ஓம் பிர்லா கூறினார். இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், உடனடியாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். இதன் காரணமாக அவையை 12 மணி வரை ஒத்திவைப்பதாக ஓம் பிர்லா அறிவித்தார்.

மாநிலங்களவைக்கு துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் தலைமைத் தாங்கினார். ஜகதீப் தன்கரின் ராஜினாமாவுக்கான காரணத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன. இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது. இதனால் பகல் 12 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் 2வது நாளாக முடங்கியது.

மத்திய அரசுக்கும் ஜகதீப் தன்கருக்கும் முன்பை போல சுமுகமான உறவு இல்லை என்றும், அவர் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தை மத்திய அமைச்சர்கள் புறக்கணித்ததாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஒத்திவைப்பு

பகல் 12 மணிவரை அவைகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.நாடாளுமன்றம் பகல் 12 மணிக்கு மீண்டும் கூடிய நிலையில், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று மீண்டும் முழக்கமிட்டதால் அவை நடவடிக்கைகள் மீண்டும் முடங்கின.மக்களவைக்கு தலைமை தாங்கிய பாஜக மூத்த எம்பி ஜகதாம்பிகா பால் பேசுகையில், “பதாகைகளைக் காட்டுவதற்குப் பதிலாக, உங்கள் தீர்மானங்களை நீங்கள் சமர்ப்பிக்கலாம், வணிக ஆலோசனைக் குழு அவற்றைப் பரிசீலிக்கும். எம்.பி.க்கள் பேச நேரம் கொடுப்பார்கள், அரசாங்கம் பதிலளிக்கும்” எனத் தெரிவித்தார்.

ஆனால், அதனை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், பிற்பகல் 2 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *