பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்: நிவாரண நிதி அறிவிப்பு
சென்னை, அக்.1-–
எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்டு இருந்த சாரம் சரிந்து விழுந்து வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளுர் மாவட்டம் எண்ணூரில் அனல் மின்நிலையம் உள்ளது. இங்குள்ள 4-வது அலகில் விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. நுழைவு வாயிலின் முகப்பு பகுதியில் கட்டுமான பணிக்காக, இரும்பு கம்பிகளை கொண்டு சாரம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பணியில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிந்தனர். அவர்கள் அனைவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். நேற்றும் அவர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இரும்பு கம்பிகளால கட்டப்பட்ட சாரம் மடமடவென்று சரிந்து விழுந்தது. வேலை பார்த்துக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக ஆம்புலன்சுகள் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி 9 தொழிலாளர்கள் பலியானார்கள். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் இரங்கல்
விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “சென்னையில் ஏற்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்த துயரச் சம்பவம் என்னை மிகுந்த வருத்தமடையச் செய்தது. இந்த கடினமான வேளையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் என் ஆழ்ந்த அனுதாபங்களும் எண்ணங்களும் இணைந்துள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வேண்டி நான் பிரார்த்திக்கிறேன். உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000மும் நிவாரணமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
முதலமைச்சர் நிவாரணம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
எண்ணூரில் பெல் நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பணியாளர்கள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மின்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், மின்வாரிய தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோரை உடனே நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கிடவும், அவர்களது உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆணையிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இந்த நிலையில், எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான பணி விபத்து தொடர்பாக காட்டூர் நிலையத்தில் ஒப்பந்ததாரர்கள் ரித்தீஷ் குப்தா, அனுப், சுமீத் மணிகண்டன் ஆகியோர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. துணை ஒப்பந்ததாரர் மீது அஜாக்கிரதையாக செயல்படுதல், உயிரிழப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
![]()





