செய்திகள்

எடப்பாடி பழனிசாமி 16–ந்தேதி டெல்லி பயணம்

Makkal Kural Official

சென்னை, செப்.14–

அண்ணா தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (16–ந்தேதி) டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் எடப்பாடி அமித்ஷாவை சந்தித்து பேசுவார் என தெரிகிறது.

சமீபத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்று நிலையில் எடப்பாடி பழனிசாமியும் டெல்லி செல்கிறார்.

அண்ணா தி.மு.க.விலிருந்து வெளியே சென்றவர்களை இணைக்கும் பணியை 10 நாட்களுக்குள் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்க வேண்டும்; இல்லையென்றால் பிரிந்தவர்களை இணைக்கும் பணியில் ஈடுபடுவேன் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த 5 –ந்தேதி எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து அவரின் கெடு காலம் நாளையுடன் நிறைவடைய உள்ளது.

இதனிடையே ஹரித்துவார் செல்வதாக கூறிவிட்டு புதுடெல்லியில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை கே.ஏ. செங்கோட்டையன் சந்தித்து பேசினார். அப்போதும், அண்ணா தி.மு.க.வினர் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவித்தார். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்ணா தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் எடப்பாடிக்கு கே.ஏ. செங்கோட்டையன் விடுத்த 10 நாள் கெடு நாளையுடன் நிறைவடை உள்ளது.

இந்தச் சூழலில் அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (16–ந்தேதி) டெல்லி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு ஏற்றாற் போல் அவரின் பிரச்சார பயணமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அண்ணா தி.மு.க ஒருங்கிணைப்பு தொடர்பாக டெல்லி தலைமை அழைப்பு விடுத்ததன் பேரில், எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு யார்–யாரை சந்திக்கிறார் என்ற தகவல் வெளியாக வில்லை. இருப்பினும் எடப்பாடியின் டெல்லி பயணம், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *