சென்னை, ஜன. 9–
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாரதீய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது.
வரும் சட்டசபை தேர்தலில் அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. – பா.ம.க. கூட்டணி இறுதியானதைத் தொடர்ந்து, டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது நினைவிருக்கலாம். இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு இன்று காலை நேரில் சென்ற பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு, கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர். சுமார் 30 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
எடப்பாடி பழனிசாமியை சந்தித்தபின் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘சென்னையில் இம்மாத இறுதியில் பிரதமர் மோடி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடியின் வருகையையொட்டி ஆலோசனை நடத்தினோம். அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. பா.ஜ.க.வுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்’’ என்றார்.
எத்தனை தொகுதிகள்
எத்தனை தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிட விருப்பம், போட்டியிட விருப்பமான தொகுதிகள், அமைச்சரவையில் பங்கா? போன்ற செய்தியாளர்களின் கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளிக்க மறுப்பு தெரிவித்தார்.
பாஜக தரப்பில் 56 தொகுதிகளும், அமைச்சரவையில் பங்கீடும் கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், 30 தொகுதிகள் வரை ஒதுக்க எடப்பாடி ஒப்புக் கொண்டதாகவும், அண்ணா தி.மு.க. 170 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, பாமகவுக்கு 17 முதல் 20 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் வழங்க அதிமுக ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
![]()





