10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் என்ன?
* ரூ.2885 கோடி திட்டங்களுக்கு அடிக்கல், திறப்பு
* 85 ஆயிரத்து 711 பேருக்கு வீட்டுமனைப்பட்டா
கிருஷ்ணகிரி, செப்.14–
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.2,884.93 கோடி செலவிலான 193 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 1114 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,23,013 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
இந்த விழாவில் வாக்குறுதிகள் பற்றி எடப்பாடி எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக பதிலளித்தார்.
10 ஆண்டு அண்ணா தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளை பட்டியலிட தயாரா என்று முதல்வர் கேட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக ஓசூர் விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்திலிருந்து விழா நடைபெறும் இடத்திற்கு செல்லும் வழியில் ஓசூர், சூளகிரி, குந்தாரப்பள்ளி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதலமைச்சர் நடந்து சென்று, சாலையின் இருமருங்கிலும் பொதுமக்கள் அளித்த உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டு, அவர்களுடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் முதலமைச்சர் பெற்றுக் கொண்டு, அவர்களது கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
2 லட்சம் பேருக்கு
நலத்திட்ட உதவிகள்
அதனைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில், 270 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவிலான 193 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 562 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 1,114 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 2,23,013 பயனாளிகளுக்கு 2,052 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.
85 ஆயிரம் பேருக்கு பட்டாக்கள்
வருவாய்த் துறை சார்பில், 77,002 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், 8,709 பயனாளிகளுக்கு சர்கார் புறம்போக்கு நிலங்களில் வீடுகட்டி குடியிருந்து வரும் நபர்களுக்கு பட்டாக்கள், 180 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதியுதவிகள், 75 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் சாலை விபத்து நிவாரண உதவிகள்; கூட்டுறவுத் துறைசார்பில், 46,061 பயனாளிகளுக்கு பயிர்க்கடன், நகைக்கடன், சுயஉதவிக் குழுக் கடன், சம்பளக் கடன், கால்நடை பராமரிப்புக் கடன், விவசாய நகைக் கடன் உட்பட பல்வேறு துறைகளின் சார்பில், மொத்தம் 2,052 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2,23,013 பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார்.
இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:–
ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி வரும் வரை வழிநெடுக ஏராளமான மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்களின் அன்பால் நிகழ்ச்சிக்கு உரிய நேரத்தில் வர இயலாமல் போனது. தி.மு.க. ஆட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் தான் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மக்களை தேடி மருத்துவம் திட்டம் கிருஷ்ணகிரியில் தான் தொடங்கப்பட்டது. 10 ஆண்டுகால அண்ணா தி.மு.க. ஆட்சியை விட நான்கரை ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் நெல்கொள்முதல் அதிகம்.
நகர் பகுதிகளில்
வீட்டு மனைபட்டா
ஊரக பகுதிகள் போல் நகரப் பகுதிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது தி.மு.க. ஆட்சியில் தான். ஓசூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும். கெலமங்கலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும். கெலமங்கலத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்படும். ஓசூரில் எல்சி 104 ரெயில்வே கேட் பகுதியில் புதிய ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். ஓசூரில் என்.எச். 44, 844 சாலைகளை இணைக்க புதிய சாலை அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.
தி.மு.க. ஆட்சி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் பொய் பரப்புகின்றனர். சொல்லாத வாக்குறுதிகள் பலவற்றை தி.மு.க. ஆட்சி நிறைவேற்றியுள்ளது. தி.மு.க. ஆட்சி மீது வயிற்றெரிச்சலில் எதிர்க்கட்சியினர் பொய்களை பரப்புகின்றனர்.
எடப்பாடிக்கு சவால்
அண்ணா தி.மு.க.வின் 10 ஆண்டு கால ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எவ்வளவு நிறைவேற்றப்பட்டன என பட்டியலிட எடப்பாடி தயாரா? அவரது ஆட்சியில் தான் அண்டை மாநிலத்தில் தொழில் துவங்க தலைதெறிக்க ஓடினார்கள்.
அண்ணா தி.மு.க. ஆட்சியில் ஒப்பந்தங்கள் போடப்பட்டன. பாதி கூட வரவில்லை. அவரும் தொழில் முதலீடு பெற வெளிநாடு சென்றார். அவர் கையெழுத்திட்டதில் கால்வாசி கூட வரவில்லை.
தமிழ்நாட்டை தெற்காசியாவிலேயே முதலிடத்துக்கு கொண்டு வரவேண்டும் என்பது தான் எனது நோக்கம். எனவே என்னைப் பற்றி யார் அவதூறு சொன்னாலும் வீண் பழி சுமத்தினாலும் அதைப்பற்றி கவலைப்படுபவன் நான் அல்ல. 50 ஆண்டுகளாக எவ்வளவோ பார்த்து விட்டேன்.
மீண்டும் தி.மு.க. ஆட்சி
2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி நிச்சயம். அடுத்து தி.மு.க. ஆட்சி தொடரும். தமிழ்நாடு மேலும் மேலும் வளரும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், உணவு துறை அமைச்சர் அர. சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோபிநாத், சட்டமன்ற உறுப்பினர்கள் டி. மதியழகன், ஒய். பிரகாஷ், டி. ராமச்சந்திரன், மேயர் எஸ்.ஏ. சத்யா, மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
![]()





