சென்னை, டிச. 15:
நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க. அரசை ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
2021–ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலையொட்டி தி.மு.க.வால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை எண் 236-ல் “தமிழ்நாட்டின் பல துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலைக் கடைகள் அனைத்தும் ஒரே துறையின்கீழ் கொண்டு வரப்படும்” என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது.
இதேபோன்று தேர்தல் வாக்குறுதி எண் 238-ல் “சுகாதாரத்தையும், எடையையும் உறுதிப்படுத்தும் வகையில் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை, மைதா, பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட எல்லாப் பொருட்களும் பாக்கெட்டுகளில் வழங்கிட ஆவன செய்யப்படும்” என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 55 மாதங்கள் கடந்த நிலையில், இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒரு துரும்பைக் கூட தி.மு.க. அரசு கிள்ளிப் போடவில்லை.
இந்த நிலையில், நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் பொது விநியோகத் திட்டத்திற்கு என்று தனித் துறையை உருவாக்க வேண்டும்; நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும் பொருட்களை பொட்டலங்களில் வழங்க வேண்டும் என்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற வற்புறுத்தியும், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அண்மையில் சென்னை சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாக்குறுதிகளை
நிறைவேற்றவில்லை
2021–ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டதாக தி.மு.க. அரசு தெரிவித்தாலும், பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன.
நியாய விலைக்கடைகளில் பணிபுரிவோருக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்றும், கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் குறைந்த ஊதியத்தில் பணிபுரிகின்றனர் என்றும், இதன் மூலம் சம வேலைக்கு சம ஊதியம் என்ற உரிமை மறுக்கப்படுகிறது என்றும்,
பொது விநியோகத் திட்டத்திற்கு என்று தனித்துறை துவங்கப்பட்டால் இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும், பொட்டலங்கள் மூலம் பொருட்கள் வழங்கப்பட்டால் எடைக் குறைப்பு என்ற பிரச்சனையே வராது என்றும் தமிழ்நாடு நியாய விலைக் கடை ஊழியர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் அரசுக்கு பெரிய அளவில் நிதிச் சுமை ஏற்படாது என்பதோடு, சுகாதாரத்தையும், எடையையும் உறுதி செய்ய வழிவகுக்கும்.
ஊதிய உயர்வு…
முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, நியாய விலைக் கடைகள் தொடர்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும், ஊழியர்களின் ஊதிய உயர்வினை உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
![]()





