சென்னை, நவ.26:
உள்ளூர் மக்கள் பிரச்சினைகளுக்காக ஆங்காங்கே போராட்டம் நடத்துங்கள் என்று மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.
சென்னை அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டமன்றத் தேர்தல் மற்றும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் எடப்பாடிபழனிசாமி பேசியதாவது:-–
அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட செயலாளர்கள் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணியை முன்னுரிமை கொடுத்து பணியாற்ற வேண்டும். தங்களது மாவட்டத்தில் இருக்கின்ற, தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வாக்காளர் படிவம் கொடுக்கப்பட்டு விட்டதா? என்று ஆய்வு செய்ய வேண்டும். யாருக்காவது படிவம் கொடுக்கப்படாமல் இருந்தால் உடனடியாக அதனை பூத் லெவல் அலுவலர்களை தொடர்பு கொண்டு அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாக்காளர்களிடம் கொடுக்கப்பட்ட படிவத்தை முறையாக பூர்த்தி செய்து அதனை திரும்ப பெற்று பூத் லெவல் அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த பணியில் எந்த தொய்வும் இருக்கக்கூடாது. அனைத்து வாக்காளர்களும் பட்டியலில் இடம் பெறுவதற்கான பணியை அண்ணா தி.மு.க.வினர் முன்னின்று செய்ய வேண்டும்.
அதோடு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிக்கு 100 சதவீதம் தகுதியான, சரியான வேட்பாளர் பெயர்களை பரிந்துரை செய்யவேண்டும். நமது கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். உள்ளூரில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அண்ணா தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு செய்த சாதனைப் பட்டியலை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
ஜனவரி மாதத்துக்குள் மெகா கூட்டணி இறுதி செய்யப்பட்டு விடும். நமது கூட்டணிதான் பலம் வாய்ந்த கூட்டணியாக இருக்கும். நாம் வெற்றி பெற்று அண்ணா தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி. கட்சியின் தேர்தல் வியூகத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கு தயாராக இருக்க வேண்டும். 2026 தேர்தலில் வெற்றி நிச்சயம்.
இவ்வாறு அவர் பேசினார்.
![]()





