சென்னை, நவ.27–
உலக மீன்வள தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஆண்டுதோறும் நவம்பர் 21–ம் நாள் ‘உலக மீன்வள தினமாக’ உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. 2025–ம் ஆண்டின் உலக மீன்வள தினம் ”கடல் உணவுப் பொருள் ஏற்றுமதியில் மதிப்புக்கூட்டுதலை வலுப்படுத்துதல்” என்ற கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.
நேற்று சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு, அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
மாநிலத்தின் சிறந்த உள்நாட்டு மீன்வளர்ப்போர், சிறந்த வண்ண மீன் வளர்ப்போர், கடலில் மிதவை கூண்டுகளில் மீன்வளர்ப்போர், சிறந்த மேலாண்மை நடைமுறையினை பின்பற்றும் மீன்பிடி துறைமுகம், சிறந்த மீனவர் கூட்டுறவு சங்கம், தமிழ் நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தினை திறம்பட செயல்படுத்திய பணியாளர்கள் குழு, சிறந்த விற்பனையாளர் ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
தொடர்ந்து, தமிழ் நாடு மீனவர் நலவாரிய பயனாளர்களுக்கும், நன்னீர் மீன் வளர்ப்புக்கான குளங்களின் கட்டுமானம் மற்றும் உள்ளீடுகள், இடுபொருட்களுக்கான மானியம், சிறிய உயிர்கூழ்ம (பயோபிளாக்) குளங்கள் அமைத்து மீன் வளர்ப்பிற்கான மானியம், குளிர்காப்பிடபட்ட நான்குசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மீன்வளர்ச்சிக் கழகத் தலைவர் ந.கௌதமன், மீனவர் நலவாரியத் தலைவர் அ. ஜோசப் ஸ்டாலின், மீனவர் நலத்துறை அரசு செயலாளர் என்.சுப்பையன், மீன்வளத்துறை இயக்குநர் க.வீ.முரளீதரன், மீனவர் நலத்துறை அலுவலர்கள், மீனவர்கள், மீன்வளர்போர் மற்றும் மீனவர் கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.
![]()





