செய்திகள்

உலக பள்ளி செஸ் சாம்பியன்ஷிப்: வேலம்மாள் அணி தங்கம் வென்றது

Makkal Kural Official

புதுடெல்லி, ஆக.8-–

சர்வதேச செஸ் சம்மேளனம் (பிஃடே) சார்பில், உலக பள்ளி அணிகளுக்கான செஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் கடந்த 2–ந் தேதி முதல் 7–ந் தேதி வரை நடந்தது. இதில் உலகம் முழுவதும் இருந்து 55 நாடுகளை சேர்ந்த சிறந்த பள்ளி அணிகள் பங்கேற்றன. 8 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி அணி கலந்து கொண்டது. வேலம்மாள் அணியில் கீர்த்தி ஸ்ரீரெட்டி, அஸ்வத், தக்‌ஷின் அருண், இளம்பரிதி, எ.ஆர்.பிரணவ் ஆகியோர் அங்கம் வகித்தனர்.

வேலம்மாள் அணி தனது 8 சுற்றுகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. அந்த அணி முறையே மங்கோலியா, ஹங்கேரி, ஆஸ்திரியா, அர்மேனியா, அமெரிக்கா, கஜகஸ்தான், இலங்கை, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாட்டு அணிகளை வீழ்த்தியது.

கஜகஸ்தான், அமெரிக்கா பள்ளி அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன. இதைத்தொடர்ந்து நடந்த டைபிரேக்கரில் கஜகஸ்தான் அணி, அமெரிக்காவை தோற்கடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது. அமெரிக்க அணி வெண்கலப்பதக்கம் பெற்றது.

சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் திறமையான செஸ் வீரர்களை உருவாக்குவதில் வேலம்மாள் குழுமம் முன்னணியில் விளங்குகிறது. உலக சாம்பியன் குகேஷ், கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, சேதுராமன், அதிபன், ஆர்.வைஷாலி உள்ளிட்ட செஸ் வீரர், வீராங்கனைகள் இங்கு படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *