நியூயார்க், செப்.29-
”உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாக எங்கள் அண்டை நாடு உள்ளது. பல தசாப்தங்களாக, முக்கிய சர்வதேச பயங்கரவாதத் தாக்குதல்கள் அந்த ஒரு நாட்டிலிருந்துதான் வருகின்றன” என ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானை கடுமையாக சாடி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.
நியூயார்க்கில் நடந்த ஐ.நா. சபை கூட்டத்தில் நீண்டகால எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தானே ஒப்புக்கொண்டுள்ளது என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபையின் 80-வது பொதுக்குழு கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக ஜெய்சங்கர், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெசை சந்தித்து புவிசார் அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் உலகளாவிய விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தார். ஐ.நா. தலைவர் அன்னலெனா பேர்பாக்குடன் கலந்துரையாடினார். அவருடனான சந்திப்பில், அவரது தலைமைக்கு இந்தியாவின் முழு ஆதரவையும் தெரிவித்தார். மேலும் ஐ.நா. சபையுடன் இணைந்து பணியாற்றுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். சவுதி அரேபியாவின் வெளியுறவு மந்திரி இளவரசர் பைசல் பின் பர்ஹான், அல்ஜீரிய வெளியுறவு மந்திரி அகமது அத்தாபையும் சந்தித்து பேசினார்.
பின்னர் ஐ.நா. கூட்டத்தில் பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாமல் ஜெய்சங்கர் பேசியதாவது:-
பயங்கரவாதத்துக்கு எதிராக தனது மக்களை பாதுகாக்க இந்தியா உரிமையை பயன்படுத்தியது. பெரிய சர்வதேச பயங்கரவாத தாக்குதல்கள் ஒரு நாட்டில் இருந்து தொடங்குகின்றன. உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாக அண்டை நாடு இருக்கிறது. சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்தியா பயங்கரவாதத்தின் சவாலை எதிர்கொண்டுள்ளது. நீண்டகால எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அந்த நாடே (பாகிஸ்தான்) ஒப்புக்கொண்டு உள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டது எல்லை தாண்டிய காட்டுமிராண்டித்தனத்தின் சமீபத்திய உதாரணம். பயங்கரவாதத்தை அரசு கொள்கை யாக வெளிப்படையாக அறிவிக்கும் நாடுகளை சந்தேகத்துக்கு இடமின்றி கண்டிக்க வேண்டும். அங்கு பயங்கரவாத மையங்கள் தொழில் துறை அளவில் செயல்படுகின்றன.
பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பது தடுக்கப்பட வேண்டும். அமைதியை மீட்டெடுக்க உதவும் எந்தவொரு முயற்சியையும் இந்தியா ஆதரிக்கும். பயங்கரவாதிகள் மீதும், அவர்களுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் மீதும் இடைவிடாத அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். ஐ.நா.வின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிகள் இரண்டும் விரிவுபடுத்தப்பட வேண்டும். சீர்திருத்தப்பட்ட கவுன்சில் உண்மையிலேயே பிரதி நிதித்துவப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஐ.நா. கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேச்சுக்கு பதிலடி கொடுத்த இந்திய பிரதிநிதி படேல் கெலாட், “ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் அபத்தமான நாடகங்களை அரங்கேற்றி உள்ளார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததும் இதே பாகிஸ்தான்தான்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் கெஞ்சியது.
இந்தியா-–பாகிஸ்தான் இடையிலான எந்தவொரு பிரச்சினையிலும் எந்த 3-ம் தரப்பினரும் தலையிட இடம் அளிக்கவில்லை” என தெரிவித்தார்.
![]()





