சென்னை, நவ. 26–
எஸ்டிஏடி உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னையில் டிசம்பர் 9-–ந் தேதி தொடங்குகிறது. இதில் 12 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன.
வோ்ல்ட் ஸ்குவாஷ், எஸ்ஆா்எஃப்ஐ, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் சாா்பில் சென்னையில் இரண்டாவது முறையாக உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி நடைபெறுகிறது. ஏற்கெனவே கடந்த 2023-இல் நடைபெற்ற போட்டியில். எகிப்து தங்கமும், மலேசியா வெள்ளியும், இந்தியா வெண்கலமும் வென்றன. தற்போதைய உலகக் கோப்பையில் இந்தியா, ஈரான், ஜப்பான், மலேசியா, கொரிய குடியரசு, ஹாங்காங், சீனா, எகிப்து, தென்னாப்பிரிக்கா, போலந்து, சுவிட்சர்லாந்து, பிரேஸில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.. எக்ஸ்பிரஸ் அவென்யூ மால், இந்திய ஸ்குவாஷ் அகாதெமி வளாகங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. வரும் டிசம்பர் 8–ந் தேதி எக்ஸ்பிரஸ் மாலில் போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், வேர்ல்ட் ஸ்குவாஷ் தலைவர் செனாவுல்ரிட்ஜ் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
3 தமிழக வீரா்கள்:
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா, அபய் சிங், வேலவன் செந்தில் குமார், தில்லியைச் சேர்ந்த அனாஹத் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தற்போது சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. வரும் 2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் ஸ்குவாஷ் அறிமுகம் ஆக உள்ள நிலையில், இந்தியாவில் உலகக் கோப்பை போட்டி நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கான இலச்சிணை, இந்திய அணியின் சீருடை அறிமுக விழா நடைபெற்றது. விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினர் -செயலர் ஜெ. மேகநாதரெட்டி, துணைத் தலைவர் என். ராமச்சந்திரன், எஸ்ஆர்எஃப்ஐ பொதுச் செயலர் சைரஸ் போன்சா, இந்திய அணியின் ஜோஷ்னா சின்னப்பா, அபய் சிங், வேலவன் செந்தில்குமார் பங்கேற்றனர்.
உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிக்காக தமிழக அரசு ரூ.3.30 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா தெரிவித்தார்.
![]()





