சிவகங்கை, ஜூலை 3–
இளைஞர் அஜித்குமார் மரணத்தில் ‘சாட்சிகள் அனைவரும் அச்சத்தில் உள்ளதாக வீடியோ எடுத்த சத்தீஸ்வரன் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (வயது 28). காரில் இருந்த நகைகள் மாயமான புகார் தொடர்பாக அவரை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றபோது, தனிப்படை போலீசார் தாக்கியதில் கடந்த 29-ந்தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், திருப்புவனம் இளைஞர் மரணம் வழக்கில் முக்கிய சாட்சியாக இருக்கும் சக்தீஸ்வரன் பாதுகாப்பு கோரி தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், ரவுடிகளுடன் தொடர்பிலுள்ள காவலர்கள், ஏற்கனவே தன்னை மிரட்டினர். வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர் ராஜா கடந்த 28-ம் தேதியே தன்னை மிரட்டினார். தனக்கும், தன்னை சார்ந்தோரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதில் கோரிக்கை விடுத்திருந்தார்.
சக்தீஸ்வரனின் வீடியோ ஆதாரம், வழக்கில் முக்கிய திருப்பமாக அமைந்துள்ள நிலையில், அவரது பாதுகாப்பு கோரிக்கை காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் கேள்விக்கு உட்படுத்தி இருந்தது.
சாட்சிகள் அனைவரும்
அச்சத்தில் உள்ளனர்
இந்நிலையில் திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரை போலீசார் தாக்கியதை வீடியோ எடுத்த அவரது நண்பர் சத்தீஸ்வரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அஜித் குமாருக்கு நடந்த சம்பவத்தை பாத்ரூமில் இருந்து வீடியோ எடுத்தது நான் தான். சம்பவம் நடக்கும் போது நான் இருந்தேன். நடந்த அனைத்தையும் நீதிமன்றத்தில் கூறினேன். நீதிபதி விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே குற்றப்பின்னணி இருப்பவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள், ஒரு சிலர் தவறுதலாக என்னைப் பற்றி அவதூறு பரப்புகின்றனர். பெயர் சொல்ல விரும்பவில்லை. முதன் முதலில் அவரை (அஜித்குமார்) நாங்க தான் அடித்து கொண்டு வந்து ஒப்படைத்ததாக கூறுகின்றனர். நான் அப்படி செய்யவில்லை. அப்படி செய்திருந்தால், நான் எதற்கு வீடியோ எடுக்கப் போகிறேன். விசாரணையில் உண்மை தெரிய வரும். கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் என் மீது பழி சொல்கிறார்கள். அஜித்துக்கு நேர்ந்த சம்பவத்தில் என்னை தொடர்பு படுத்தி பேசுவதால், கடந்த 2 நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன்.
ஐகோர்ட் நீதிபதியே எனக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று உத்தரவிட்டார். எனக்கு பிரச்னை இல்லை. என் உயிர் போனால் கூட கவலைப்படவில்லை. நான் முன் வந்த பிறகு தான், பிற சாட்சிகளும் தயாரானார்கள். அஜித்குமார் கஸ்டடி மரணத்தில் சாட்சிகளாக உள்ள அனைவரும் அச்சத்தில் உள்ளனர். சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். நடந்தது என்ன என்பதை நீதிமன்றத்தில் கண்டிப்பாக தெரிவிப்பேன். என்னைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எல்லாவற்றிற்கும் துணிந்து தான் ரெடியாக இருக்கிறேன்.
எங்களுக்கு பாதுகாப்பு கொடுத்தே ஆக வேண்டும். அந்த சம்பவத்தின் போது உடன் இருந்த இளைஞர்கள் ரொம்ப பயந்து இருக்கிறார்கள். ஏற்கனவே, அந்த நிகழ்வில் இருந்து வெளியே வர முடியாத அவர்கள், தற்போது போலீசுக்கு எதிராக போகும் போது, வெளியே சொல்ல முடியவில்லை. அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதுகாப்பு கொடுக்க வேண்டும். எனக்கு மிரட்டல் விடுத்த நபர் யார் என்று எனக்கு தெரியும். அவன் வாயை மூட வேண்டும் என்பதற்காகத் தான், இதனை சொல்கிறேன். காவலர் ராஜாவுக்கு நெருக்கமானவர்கள் தான் மிரட்டினார்கள். வேண்டுமெனில், ராஜாவின் தொலைபேசி உரையாடல் விபரங்களை ஆய்வு செய்தால் உண்மை தெரிய வரும். அரசையும், அதிகாரிகளையும் குறை சொல்லவில்லை. அன்று நடந்த சம்பவம் குற்றம். குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். நீதி வழங்கக்கூடிய தெய்வமாக பார்க்கப்படும் மடப்புரம் காளியம்மன் கோவில் முன்பு இப்படி அநீதி நடந்ததை இப்போது வரை என்னால் ஏற்கமுடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
![]()





