டேராடூன், செப். 18–
உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் பேரிடர் பாதித்த நந்தநகரில் இன்று அதிகாலை கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களாக மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் உத்தரகண்ட், ஹிமாசல பிரதேச மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. உத்தராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்றை முன் தினம் டேராடூனில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இதன் காரணமாக தம்சா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆற்றங் கரையோரத்தில் உள்ள தப்கேஷ்வர் மகாதேவ் கோயிலைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்தது. இதனால் 15க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாயமான 16 பேரை தேடும் பணி நடந்தது. பல்வேறு இடங்களில் மழை வெள்ளத்தில் சிக்கிய 900-க்கும் மேற்பட்டவர்களை மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர்.
இந்நிலையில், சாமோலி மாவட்டத்தில் பேரிடர் பாதித்த நந்தநகரில் இன்று அதிகாலை கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேரை காணவில்லை. நகர் பஞ்சாயத்து நந்தநகரின் குந்த்ரி வார்டில் உள்ள 6-க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவின் இடிபாடுகளால் சேதமடைந்ததாக மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.நிலச்சரிவு ஏற்பட்டபோது வீடுகளுக்குள் 7 பேர் இருந்ததாகவும், அவர்களில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர், 5 பேரை காணவில்லை.இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் காவல் துறை குழுக்கள், ஆம்புலன்ஸ்களுடன் மருத்துவக் குழு, உள்பட மாவட்ட நிர்வாகத்தின் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியைத் தொடங்கியுள்ளனர்.
இது குறித்து உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள அறிக்கை: சாமோலி மாவட்டத்தின் நந்தநகர் காட் பகுதியில் பெய்த கனமழையால் அருகிலுள்ள வீடுகள் சேதமடைந்ததாக வருத்தமளிக்கும் செய்தி கிடைத்துள்ளது.
மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். நான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன், மேலும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறேன். அனைவரின் பாதுகாப்பிற்காகவும் நான் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
![]()





