செய்திகள்

உதயநிதிக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..

Makkal Kural Official

சென்னை, நவ. 27–

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று முகாம் அலுவலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது துர்கா ஸ்டாலின் உடனிருந்தார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:–

கொள்கைப் பற்றோடு உழைப்பிலும் உயர்ந்து வரும் உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! இளைஞரணிச் செயலாளராக – விளையாட்டுத் துறை அமைச்சராக – துணை முதலமைச்சராக நீ ஆற்றிவரும் பணிகளை மக்களும் கழகத்தினரும் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும்போது தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன்! திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைத் தொண்டனாக நான் உனக்கு அறிவுறுத்துவது, காட்சிக்கு எளியவனாக, கடுஞ்சொல் சொல்லாதவனாக, மக்களின் அன்புக்குரியவனாக, எப்போதும் அவர்களுக்காகக் களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும். இளைஞர்களிடம் திராவிட இயக்கக் கருத்தியலைத் தொடர்ந்து விதைத்து, அவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்!

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அண்ணா, கருணாநிதி

நினைவிடங்களில் மரியாதை

முன்னதாக தனது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள், பாதுகாவலர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அங்கும் பலருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உதயநிதி பேசுகையில், தாய், தந்தையை கூட இன்னும் சந்திக்காமல் நேராக பெரியார் திடலுக்கு வந்தேன். மூத்தவர்களாகிய உங்களை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக வந்துள்ளேன்.

இந்த நிகழ்வுகளின்போது அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆதிக்கவாதிகளிடம் குவிந்திருந்த அதிகாரத்தை சாமானிய மக்களிடம் கொண்டு சேர்த்த தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் பிறந்த நாளில் மரியாதை செலுத்தினேன். அண்ணா வழியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காப்போம்! மாநில உரிமைகளையும் –சமூக நீதியையும் நிலைநாட்டுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், துணை முதலமைச்சரும், கழக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது மக்கள் பணி சிறந்திட வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் எம்.பி. வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘துணை முதலமைச்சர், எப்போதும் இனியவர், என் அன்பிற்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின் நீடு வாழ்க. பொன்றாப் புகழுடனும் குன்றாப் பெருமையோடும் நிலைத்து வளர்க’ என்று தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *