செய்திகள்

உடல்நலக்குறைவு காரணமாகவே துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா: அமித்ஷா விளக்கம்

Makkal Kural Official

புதுடெல்லி, ஆக. 25–

”உடல்நலக் குறைவு காரணங்களுக்காகவே துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார். வேறு காரணம் இல்லை” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் திடீரென பதவியை ராஜினாமா செய்கிறேன் என கூறினார். உடல் நலனை முன்னிட்டு மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்து ஜனாதிபதி திரவுபதிக்கு அதுபற்றி ராஜினாமா கடிதம் ஒன்றையும் அவர் வழங்கினார். இதேபோன்று பிரதமர் மோடிக்கும், அமைச்சர்கள் குழுவிற்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.பிரதமரின் ஒத்துழைப்பும், ஆதரவும் விலைமதிப்பற்றவை என தெரிவித்திருந்தார்.

எனினும் அவருடைய ராஜினாமா எதிர்க்கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த ராஜினாமா அறிவிப்புக்கு பின்னர் அவர் பெரிய அளவில் வெளியே வரவில்லை. எந்தவித விமர்சனங்களையும் வெளியிடவில்லை. அவர் எந்த பகுதியில் இருக்கிறார் என்பது கூட தெரியாத அளவுக்கு உள்ளது. இந்த நிலையில் அவர் வீட்டுக்காவலில் இருப்பதாக எதிர்க்கட்சியினர் விமர்ச்சித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, இதுபற்றி தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். ஜக்தீப் தனகர் அரசியல் சாசன பதவி ஒன்றை வகித்தவர். அவர், தன்னுடைய பதவி காலத்தின்போது சிறந்த முறையில் பணியாற்றியவர். உடல்நலப் பிரச்சினையால் தனிப்பட்ட முறையில் ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார். ஜக்தீப் தன்கரின் ராஜினாமாவுக்கு வேறு காரணங்களைத் தேடுவது சரியல்ல. இந்த விஷயத்தில் வேறு ஏதேனும் உண்டா? என நீண்ட ஆராய்ச்சி செய்ய யாரும் முயற்சிக்க வேண்டாம்.

இந்த ராஜினாமா பற்றி அவருடைய கடிதம் தெளிவான சுய விளக்கம் அளித்திருக்கிறது. உடல்நலனை கவனத்தில் கொண்டு அவர் பதவி விலகியுள்ளார். அவர் அமைச்சர்கள், பிரதமர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும், அவருடைய மனதில் இருந்து நன்றி தெரிவித்து இருக்கிறார் என விளக்கம் அளித்தார்.

பதவிப் பறிப்பு மசோதாவில்

பிரதமர் இணைத்துள்ளார்மேலும் அமித்ஷா கூறுகையில், நான் முழு நாட்டையும், எதிர்க்கட்சியையும் கேட்க விரும்புகிறேன். ஒரு முதல்வர், பிரதமர் அல்லது எந்த தலைவரும் சிறையில் இருந்து நாட்டை நடத்த முடியுமா? அது நமது ஜனநாயகத்தின் கண்ணியத்திற்கு ஏற்றதா? 130வது திருத்தம் பற்றி நான் முழு நாட்டிற்கும் சொல்ல விரும்புகிறேன். இந்த திருத்தத்தில் பிரதமர், முதல்வர் அல்லது மாநில அரசாங்கத்தின் எந்த தலைவரும் சிறை சென்றால் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.அவர்கள் ராஜினாமா செய்யவில்லை என்றால், அவர்கள் சட்டப்படி பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள். இதை தான் 130வது திருத்தத்தில் நாங்கள் சேர்த்துள்ளோம்.

இந்த மசோதாவில், பிரதமர் மோடி தன்னையும் சேர்த்துக்கொண்டுள்ளார். ஆனால் முன்னதாக, பிரதமராக இருந்த இந்திரா காந்தி, 39வது சட்டப்பிரிவில் திருத்தத்தை அறிமுகப்படுத்தினார். அந்தப் பிரிவானது, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் நீதிமன்றங்களின் நீதித்துறை விசாரணையிலிருந்து பாதுகாக்கும் வகையில் இருந்தது. தற்போது பிரதமர் மோடி தனது பதவிக்கு எதிராக ஒரு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளார், அதன்படி பிரதமர் சிறைக்குச் செல்ல நேர்ந்தால், அவர் ராஜிநாமா செய்ய வேண்டும். பதவி நீக்க மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும். ராகுல் காந்தி பீகாரில் ஆட்சி அமைக்க தண்டனை பெற்ற லாலு யாதவை கட்டிப்பிடிக்கிறார். இது இரட்டை நிலைப்பாடு இல்லையா? காங்கிரஸ் கட்சியினர் மக்களிடையே ஒருவித மாயையை உருவாக்க விரும்புகிறார்கள். அவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள் என்றார்.

துணை ஜனாதிபதி தேர்தல் குறித்துப் பேசிய அமித்ஷா, துணை ஜனாதிபதி இந்தியாவின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர், பிரதமர் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர். துணை ஜனாதிபதியை இந்தியாவின் தெற்குப் பகுதியில் இருந்து தேர்வு செய்ய முடிவெடுத்தோம். சி.பி. ராதாகிருஷ்ணன் நீண்ட நெடிய அரசியல் அனுபவம் கொண்டவர். நாங்கள் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இணைந்திருப்பது என்ன தவறா? பிரதமர் மோடி, நான் என அனைவரும் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இணைப்பைக் கொண்டிருக்கிறோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *