‘ரண்டக்க… ரண்டக்க… ரண்டக்க…டும்… டும்டும்டா… டும்டும்டா…டும்டும்டா…’
என்று அந்தச் சாலை முழுக்க ஒலித்துக் கொண்டிருந்தது, தாரை தப்பட்டை. அந்தத் தாளத்திற்குத் தகுந்தது போல ஆடிக்கொண்டிருந்தார்கள், இளசுகள். அதனோடு பெருசுகளும் சேர்ந்து இருந்தார்கள்.
“வருசத்துல ஒரு நாள் இப்படி சந்தோஷமா இருந்தா தானே வருசமெல்லாம் நல்லா இருக்கும். இந்தத் திருவிழாக்களெல்லாம் தினந்தோறும் இருந்தா எப்படி இருக்கும்? ” என்று ஒரு பெருசு கேட்க
“நல்லா இருக்காதுங்க. ஒரு நாளைக்கு தீபாவளி வந்தா தான் நல்லா இருக்கும். தினந்தோறும் தீபாவளி வந்தா அந்தத் தீபாவளிக்கே மரியாதை இல்லாமல் போகும். பனிரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை பூத்தா தான் குறிஞ்சிப் பூ . தினந்தோறும் பூத்தா அது நெருஞ்சிப் பூ “
என்று நறுக்கென்று பதில் சொன்னார், ஒரு பெரியவர்.
” ஆளப் பாத்தா அமுக்கினி மாதிரி இருக்கார். பேச்சப் பாத்தா பெருசா பேசுறாரே ? அந்தக் காலத்து ஆளுகிட்ட எல்லாம் பேசி ஜெயிக்க முடியாது” என்று தாரை தப்பட்டைக்குத் தகுந்தது போல மறுபடியும் ஆடிக்கொண்டிருந்தார், கேள்வி கேட்டவர்
” பக்த கோடிகளுக்கு வணக்கம்.இன்னும் சிறிது நேரத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பண்ணத் தயாராக இருக்கிறோம். பக்த கோடிகள் அனைவரும் தவறாது விழா நடக்கும் இடத்திற்கு வந்து அம்மன் அருள் பெறுமாறுக் கேட்டுக் கொள்கிறோம் “
என்று குழாய் ரேடியாவிலிருந்து ஒருவன் பேசிக் கொண்டிருந்தான்.
“பக்தி தான் ஒருவனை முன்னுக்குக் கொண்டு வரும். கடவுள் தான் ஒருவனுக்கு எல்லாவற்றையும் தரும். இன்னும் சிறிது நேரத்தில் அம்மன் ஊர்வலம் அவ்வளவு அமர்க்களமாக நடைபெறப் போகிறது. ஆங்காங்கே இருக்கும் பக்த கோடிகள் அனைவரும் விழா நடக்கும் இடத்திற்கு வருமாறு உங்களை அன்புடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்”
என்று மறுபடியும் ஒலி பெருக்கியில் ஒருவன் இடைவிடாமல் கத்திக் கொண்டே இருந்தான்.
“இன்னும் கொஞ்ச நேரத்தில அம்மன் ஊர்வலம் புறப்பாடு இருக்கு. தீச்சட்டி, காவடி ,அலகு குத்துதல் ,மாவிளக்கு, கரகம், இரவில் தீமிதி திருவிழா இருக்காமே ? “
” ஆமா..காலை சிறப்பு பூஜையும் அதைத்தொடர்ந்து அன்னதானமும் இருக்காமே ? “
” ம்”
பக்த கோடிகள் அனைவரும் கோயிலின் கூட சிறப்பு பூஜை சிறப்பாக ஆரம்பமானது.
” ஐயா பேருக்கு அர்ச்சனைங்களா ?
என்று கோயில் பூசாரி கேட்க
“அய்யா பேரு, அம்மா பேரு, புள்ளைங்க பேரு, எல்லா பேரும் பெத்த பேரு. நீங்க எல்லாருக்கும் மொத்தமா பூஜை பண்ணுங்க “
என்று ஒருவன் நகைச்சுவையாய் சொல்ல, பழத் தட்டையும் பூத் தட்டையும் வாங்கிய அந்தப் பூசாரி ஏதேதோ பெயரைச் சொல்லிச் சிறப்பு பூஜையைச் சிரித்துக் கொண்டே பூஜை செய்து பக்தர்களிடம் கொடுத்தான்.
“அலகு எங்க குத்த, வாயில குத்தவா? இல்ல வயித்துல குத்தவா? “
என்று அலகு குத்துபவன் கேட்க
” ம்….உன் தலையில குத்து. என்ன எகத்தாளமா பேசுற ? அலகு எங்க குத்துவாங்க. அத அழகா குத்து “
என்று ஒரு பெண்மணி கடிந்து கொள்ள, அவளின் இடது பக்கக் கன்னத்தில் திருநீரை வைத்துச் சின்ன சூலாயுதத்தால் ஓட்டை போட்டு, பெரிய வேலை பொதக்கென்று குத்தினான். அந்தப் பெண்மணியின் இடது கன்னத்தில் புகுந்து, வலது பக்கம் வெளியே வந்தது .
“அரோகரா… அரோகரா… ” என்று கத்தியபடியே அந்தப் பெண் தன் பக்தியை வெளிப்படுத்தினாள்.
” இது அம்மன் கோயிலாச்சே ? எதுக்கு அரோகரா ன்னு சொல்றாங்க”
என்று விவரம் தெரிந்த ஒருவர் கேட்க
” சாமிங்கிறது எல்லாம் ஒன்னு தான். நாம தான் அதுக்கு உருவம் கொடுத்து மாத்தி மாத்தி வச்சிருக்கோம் .இங்கே பெண் சாமிகள், ஆண் சாமிகள் அப்படிங்கிற எந்த உருவமும் இல்லை. எல்லாம் ஒரே சாமி தான். உருவங்கள் தான் வேற வேற…சாமிங்கிறது ஒன்னு தான் .அம்மன் கோயில்ல அலகு குத்தி முருகனக் கும்பிடுறதும், முருகன் கோயில்ல அலகு குத்திப் பார்வதியக் கும்பிடுறதும் நம்ம தமிழர்களுக்கு பழகிப்போன ஒன்னு தான். அதனால நீ எதுவும் வருத்தப்படாதே.. அரோகரா… சொன்னாலும் ஒன்னு தான் தேவுடா தேவுடா ன்னு சொன்னாலும் ஒன்னு தான்” என்று அலகு குத்திய இடத்தில் ஒருவன் அழகாக சொன்னதைக் கேட்டு மிரண்டு போனான், கேட்டவன்.
“சாமி என் கை ரேகையைப் பார்த்து சொல்லுங்க. எந்த தொழில் செஞ்சாலும் விளங்க மாட்டேங்குது.”
என்று தொழிலிலும் வாழ்க்கையிலும் தோத்துப்போன ஒருவன், அங்கிருந்த ஒரு பூசாரியிடம் தன் கையை நீட்டினான்.
அட்ச ரேகை, தீர்க்க ரேகையை ஆராயும் புவியியல் விஞ்ஞானியைப் போல அவன் வலது கையை அப்படியும் இப்படியும் ஆகத் திருப்பி ஆருடம் சொன்னான், அந்தப் பூசாரி.
” தம்பிக்கு கைரேகை எல்லாம் நல்லா தான் இருக்குது. தலை எழுத்து தான் சரியா இல்ல. சீக்கிரம் நீங்கள் முன்னுக்கு வந்துடுவீங்க. இதை நான் சொல்லல. உங்க ரேகை சொல்லுது “
என்று கைரேகை பார்ப்பவனுக்கு சாதகமாகப் பேசிக் கையில் கொஞ்சம் பணத்தை வாங்கினான், பூசாரி.
” மாவிளக்கு எங்க எடுக்கணும் கண்ணுல எடுக்கலாமா? வயித்துல எடுக்கலாமா? “
என்று ஒரு பெண்மணி கேட்க
“நீங்க நேர்த்திக்கடன் எங்க போட்டு இருக்கீங்களோ? அங்க எடுங்க. கண்ணுல நேர்த்திக்கடன் போட்டா கண்ணு மேல வெத்தலை வச்சு அதுக்கு மேல மாவிளக்கு போடலாம். இல்ல வயித்துல வெத்தலைய வச்சு அதுக்கு மேல மாவிளக்கு போடலாம். உங்களோட நேர்த்திக்கடன் என்னன்னு தெரியல”
என்று ஒரு பூசாரி சொல்ல ” எனக்கு கண்ணுலே போடுங்க “
என்று அந்த இளம் வயதுப் பெண் மல்லாக்கப் படுக்க, அவளின் இரண்டு கண்களிலும் வெற்றிலையை வைத்து மாவிளக்கு ஏற்றினான், அங்கிருந்த பூசாரி
மாவிளக்கு எடுப்பவர்கள், தாரை தப்பட்டைச் சத்தம் , அலகு குத்துதல், என்று அந்தப் பகுதி முழுவதும் மக்களால் நிறைந்து வழிந்தது, அந்தச் சாலை. தாரை தப்பட்டைச் சத்ததிற்கு ஆடிக்கொண்டிருந்தவர்களில் பாதிப்பேர் சரக்கடித்தவர்களாக இருந்திருப்பார்கள் போல சிறிது நேரத்திற்கெல்லாம் சாய்ந்து குப்புற கிடந்தார்கள்.
” இன்னும் சற்று நேரத்தில் அன்னதானம் ஆரம்பமாகும் .பக்தர்கள் அனைவரும் இருந்து, விருந்து சாப்பிட்டுப் போகும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று மறுபடியும் ஒலிபெருக்கியில் ஒருவன் கத்த, சாப்பாட்டு மேஜைகளை நோக்கி ஓடினார்கள் மக்கள்.
“கொஞ்சம் பொறுமையா வாங்க எல்லாருக்கும் சாப்பாடு இருக்கு. எல்லாருக்கும் கொடுத்துட்டு தான் போவோம்” என்று அங்கிருந்த பக்தக் கோடிகள் மக்களைப் பக்குவமாக ஒதுக்கினார்கள்.
சிறிது நேரத்திற்கு எல்லாம் பந்தி முடிந்தது. இரவு பூக்குழி இறங்குதல் அதனைத் தொடர்ந்து சினிமாப் பாட்டுக் கச்சேரி, அதனுடன் நடனம் என்று ஒலிபெருக்கியில் ஒருவன் ஒப்பிக்க விசில் பறந்தது.
மினுக்கு…. மினுக்கு என்று மின்னிக் கொண்டிருந்த நட்சத்திர இரவில் வானத்தை இழுத்து, பூமியில் கொண்டு வந்து போட்டது மாதிரி தீக்கங்குகள் நட்சத்திரங்களாய் பழுத்து கிடந்தன.
” சாமி என்னை காப்பாத்து, சாமி அரோகரா, ஐயப்பா, முருகா, மாரியாத்தா காளியாத்தா என்று வாய்க்கு வந்த சாமிகளின் பெயரைச் சொல்லிக்கொண்டு, அந்தத் தீமிதி திருவிழாவில் அந்தக் கங்குகளை மிதித்த படியே ஓடினார்கள் பக்தர்கள்.
அப்படி இப்படிமாக தீமிதி திருவிழா நடந்து முடிந்திருந்தது
” அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் சினிமா ஆடல், பாடல் நிகழ்ச்சி”
என்று சொல்ல அந்தத் தெரு இளசுகள் முழுவதும் அந்த இடத்தில் குழுமிக் கிடந்தார்கள். கிட்டத்தட்ட விழா முடியும் தருணத்திற்கு வந்தபோது,
சுற்றும் முற்றும் பார்த்த ஒரு பெரியவர் அருகில் இருந்த ஒரு நபரிடம் சொன்னார்
“தம்பி இங்கே நடந்துக்கிட்டு இருக்கிறது எல்லாம் நல்லா இருக்கா? என்று கேட்க
“ரொம்ப நல்லா இருக்கு . ஏன் அப்படிக் கேக்குறீங்க. ? இதுவரைக்கும் இந்த மாதிரி விழாவ நான் பார்த்ததே இல்லை . எல்லாம் சிறப்பா இருக்கு “
அது சரி ,நீங்க என் இந்தத் திருவிழாவுக்குள்ள வராம இருக்கீங்க? “
என்று அவன் கேட்க
“இந்தத் திருவிழா ஆட்டம், பாட்டம் எல்லாம் எனக்கு பிடிக்காது தம்பி “
என்று சலிப்பாகச் சொன்னார், அந்தப் பெரியவர் .
“மூடநம்பிக்கை உடைந்து பகுத்தறிவு என்னைக்கு மேலோங்குதோ அன்னைக்குத் தான் இந்த மனுஷங்க வைக்கிற விழாவில நான் சேர்வேன். இந்த மாதிரி அலகு குத்துறது . தீயில இறங்குறது .மாவிளக்கு எடுக்குறது. இதுல எல்லாம் கடவுள் வரமாட்டாரு. நல்ல மனசு உள்ள மனுஷங்க மனசுல கண்டிப்பா வந்து இறங்குவார். அதனால இந்த சம்பிரதாயங்களுக்குள்ள என்னால வர முடியல. அத நான் குற்றம்ன்னு சொல்லல. அது அவங்களுக்கு பிடிச்சிருக்கு. செய்றாங்க. அவ்வளவுதான் “
என்று சொன்னவர்
“தம்பி, நாம நின்னு பேசிக்கிட்டு இருக்கிறது என்ன சாலைன்னு தெரியுமா ? “
” தெரியலங்களே. தார் போட்டு இருக்கிறதால இது தார்ச்சாலையா?”
என்று அவன் கிண்டலாகக் கேட்ட
” எல்லா ஊர்லயும் தான் தார் போட்டு இருக்காங்க. ஆனா ஒரு சிலருடைய பேர் இந்த தார் சாலைகளை வேறுபடுத்திக் காட்டுது.”
என்று அவன் சொல்ல ,புரியாமல் தலையை அசைத்தான்.
” தம்பி, இந்தச் சாலைக்கு முன்னால இருந்த பேரு பூந்தமல்லி நெடுஞ்சாலை. அதுக்கப்புறம் இந்தச் சாலையை ஈவேரா பெரியார் நெடுஞ்சாலை ” ன்னு மாத்தியிருக்காங்க. இந்த ஈவெரா நெடுஞ்சாலைங்கிறது, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பெரிய சாலைகள்ல ஒன்னு. வடக்கையும் தெக்கையும் இணைக்கிற ஒரு பெரிய சாலை. இந்த சாலையில எக்மோர், பூங்கா நகர், ரயில் நிலையங்கள். ராஜீவ் காந்தி ஹாஸ்பிட்டல்,
ஈகா தியேட்டர், ரோகிணி தியேட்டர் ” இப்படி எல்லாமே இருக்கு. ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் தான் இங்க இல்ல”
என்றார் அந்தப் பெரியவர்.
” என்னய்யா அதான் இந்தச் சாலையில இருக்கிற எல்லாத்தையும் சொல்லிட்டீங்களே? இனி என்ன இல்ல “
என்று சொல்லி அவர் விழிக்க
” பெரியார் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா? கடவுளை மற மனிதனை நினை. ஆனா இங்க இருக்குறவங்க மனுசன மறந்துட்டு கடவுள கொண்டாடுறாங்க. இது பெரியார் கொள்கைக்கு எதிரானது. இங்க பாருங்க மக்கள் என்னென்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க. இன்னொரு பெரிய கூத்து என்னன்னா அதை நான் உன்கிட்ட சொல்லியே ஆகணும். கடவுள் இல்லை கடவுள் இல்லை அப்படின்னு சொன்ன அந்த பெரியாரையே கடவுளாக்கி இருக்காங்க பாரு”
என்று அவர் கை நீட்ட, சாமிக்குப் போட்ட மாலைகளில் ஒன்று சுழன்று வந்து பெரியாரின் கழுத்தில் கிடந்தது இதை பார்த்தவர்
“ஆமா , இதுக்கு என்ன இப்போ ?
பெரியாரை ஏத்துக்கிறவங்க பகுத்தறிவு பேசட்டும் .பெரியாரை ஏத்துக்கிறாதவங்க ஆன்மீகம் பேசட்டும் . சாமியே இல்லன்னு சொன்ன பெரியாரும் தொன்னூறு வயசுக்கு மேல வாழ்ந்தாரு. சாமி இருக்குன்னு சொன்ன ராஜாஜியும் தொன்னூறு வயசுக்கு மேல வாழ்ந்தாரு. சாமி இருக்குன்னு சொல்றதும், இல்லன்னு சொல்றதும் அவங்க அவங்க உரிமை.
அதனாலதான் எத்தனையோ சாலைகளை இணைக்கிற இந்த பெரியார் சாலை, ராஜாஜி சாலையையும் இணைக்குது “
என்று பெரியவர் சொல்ல, விழித்து நின்றார், கேட்டவர்.
கோயில் திருவிழாக் கொண்டாட்டத்தின் போது, தன் கழுத்தில் விழுந்த மாலையுடன் சாமியாக நின்று கொண்டிருந்தார், பெரியார், பெரியார் சாலையில்.
![]()





