ஈரோடு, டிச.10:
ஈரோட்டில் விஜய் பிரசாரத்துக்கு 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளதால், த.வெ.க. பொதுக்கூட்டத்தை 2 நாட்கள் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுவரை இல்லாத கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோட்டில் த.வெ.க. சார்பில் விஜய் பிரச்சார கூட்டம் வருகிற 16-ந் தேதி நடைபெற இருந்தது. இந்த நிலையில் பிரச்சார கூட்டம் 18-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக 19 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோட்டில் த.வெ.க. நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோட்டில் த.வெ.க. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை போலீஸ் அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டு நிபந்தனைகளை கடிதமாக வழங்கியுள்ளனர். அதில் 84 நிபந்தனைகள் கொடுக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக மழை, வெயில் வந்தால் என்ன செய்யப்போகிறீர்கள்? என்று கேட்கப்பட்டு உள்ளது. அதற்காக குடைகள் தேவைப்படும். இந்த நிபந்தனைகளை நிறைவு செய்யும் நோக்கத்தோடு கூடுதலாக 2 நாட்கள் கழித்து 18-ந் தேதி பொதுக்கூட்டம் நடத்த கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அனுமதி கேட்கப்பட உள்ளது.
84 நிபந்தனைகள் என்பது இதுவரை இல்லாத ஒன்று. தற்போது தான் அனைத்து நிபந்தனைகளையும் படித்து பார்த்தேன். முழுமையாக இதை நிறைவு செய்து அனுமதி பெற வேண்டும், என்றால் கூடுதல் நாட்கள் தேவைப்படுகிறது. கட்சியின் தலைமையிடம் நாட்கள் மாற்றத்துக்கு அனுமதி கேட்கப்படும். விரைவில் பிரசாரத்துக்கு போலீசார் அனுமதி வழங்குவார்கள் என்று நம்புகிறோம். அதன் பிறகு பணிகள் விரைவாக தொடங்கப்படும்.
பிரச்சார பொதுக்கூட்டத்துக்கு எத்தனை பேர் வருவார்கள், அவர்களது பெயர் பட்டியல் விவரத்தை கேட்டு உள்ளனர். அவர்களது பெயர் பட்டியல் எப்படி கொடுக்க முடியும்?. அடையாள அட்டை கேட்டு உள்ளனர். விதிமுறைகள் தொடர்பாக நாம் எதுவும் விமர்சிக்க முடியாது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை மேற்கோள் காட்டுவார்கள். சொல்லத்தான் நினைக்கிறேன், உள்ளத்தால் துடிக்கிறேன். வாய் இருந்தும் சொல்வ தற்கு வார்த்தை இன்றி தவிக்கிறேன்.
புதுச்சேரியில் இத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. விஜய் கோவை விமான நிலையத்தில் இருந்து காரில் விஜயமங்கலத்துக்கு வருகிறார். இந்த வழித்தடம் உறுதி செய்யப்பட்டாலும், அவர் பொதுக்கூட்ட திடலுக்கு கிராமப்புற சாலை வழியாக சுமார் 14 கி.மீ. சுற்றி வர வேண்டிய வழியை போலீசார் காட்டுகின்றனர். அந்த வழியில் ஏதாவது லாரி எதிரில் வந்துவிட்டால்கூட ஒன்றும் செய்ய முடியாது. இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
இந்த நிலையில் நேற்று மாலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் த.வெ.க. நிர்வாகிகள் 18-ந் தேதி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.
![]()





