செய்திகள்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

Makkal Kural Official

ராமநாதபுரம், டிச. 29:

நடுக்கடலில் மீன்பிடித்தபோது தமிழகத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு துறைமுக பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அதன்படி மண்டபத்தை சேர்ந்த விசைப்படகு ஒன்றில் ஆமோஸ்டின் (வயது 25), ஜோன்தாஸ் (38), பரலோக செபஸ்தியான் (26) ஆகிய 3 மீனவர்களும் மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் நடுக்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலில் ரோந்து வந்துள்ளனர். பின்னர் அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் ஆமோஸ்டின், ஜோன்தாஸ், பரலோக செபஸ்தியான் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களுடைய படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 3 பேரும் ஊர்க்காவல் துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, 3 மீனவர்களையும் வருகிற 7-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து 3 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஸ்டாலின் கடிதம்

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 3 மீனவர்களை அவர்களது மீன்பிடிபடகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தமிழக மீனவர்களும் அவர்களது மீன்பிடி படகுகளும் இலங்கை அதிகாரிகளால் சிறை பிடிக்கப்படுவது தங்கு தடையின்றி தொடர்ந்து நடைபெற்று வருவது கவலை அளிக்கிறது. இந்த கைது நடவடிக்கைகள் நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 248 மீன்பிடி படகுகள் அவர்கள் வசம் இருக்கிறது. 61 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் காவலில் இருக்கிறார்கள்.

எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற கைது சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும், இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உரிய தூதரக வழிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *