சென்னை, ஜன. 3:
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்தாகக் கூறி தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
இருப்பினும், தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து கப்பலில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், விசைப்படகை சுற்றி வளைத்தனர்.
அதில் இருந்த 9 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி சிறைபிடித்து கைது செய்ததுடன், 2 நாட்டுப்படகையும் பறிமுதல் செய்து காரைநகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.
முதற்கட்ட விசாரணை முடித்து மீனவர்கள் 9 பேரும் படகுடன் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இலங்கை கடற்படை திட்டமிட்டுள்ளது. 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது அவர்களது குடும்பத்தினரையும், மீனவ மக்களையும் மிகுந்த சோகம் அடையச் செய்துள்ளது.
இலங்கை கடற்படை அத்துமீறி நடவடிக்கை எடுத்து 9 மீனவர்களை கைது செய்து இருப்பதாகவும், எனவே அவர்களை விடுவிக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்து உள்ளன.
முன்னதாக புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்து உள்ள கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் அனைவரையும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இலங்கை கடற்படையினர் ஆஜர்படுத்தினர்.
அப்போது காரைக்கால் மீனவர்கள் 11 பேரையும் வரும் 7-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
![]()





