சேலம், டிச. 22:
எஸ்.ஐ.ஆரை பார்த்து ஸ்டாலின் ஏன் பயப்படுகிறார், கதறுகிறார் என எடப்பாடி பழனிசாமி கேட்டார்.
மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற ஒருமித்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் கூட்டணியில் இணையலாம்” என அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் எம்.எல்.ஏ. திட்ட நிதியில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் எடப்பாடி பேசும்போது கூறியதாவது:–
திமுக மக்கள் விரோத அரசாங்கம். திமுக ஆட்சியை அகற்ற ஒற்றை கருத்துடைய கட்சிகள் எங்களுடன் கூட்டணியில் இணையலாம். இதுதான் திமுக ஆட்சியின் கடைசி ஆண்டு. இதற்கு மேல் தி.மு.க.வால் ஆட்சிக்கு வரமுடியாது.
அண்ணா தி.மு.க. ஆட்சியில் இருந்த போது பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்குமாறு ஸ்டாலின் கூறினார். இதேபோல வரும் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்போடு 5000 ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகால அண்ணா தி.மு.க. ஆட்சியில் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தோம். எந்த ஆட்சிக்கும் ஏற்படாத பிரச்சினைகளை சந்தித்தோம். வறட்சி, பல புயல்கள் மற்றும் கொரோனாவை சந்தித்துள்ளோம். ஓராண்டு அரசுக்கு வரவேண்டிய வரி வருவாய் வரவில்லை. கொரோனாவுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்துள்ளோம்.
கடன் வாங்குவதில் முதல் மாநிலம்
இந்தியாவில் அதிக கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் தான். இது திமுக அரசின் பெரிய சாதனை. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் கடன் அதிகரித்து கொண்டிருக்கிறது. தமிழக அரசு பொருளாதார நிபுணர் குழுவை அமைத்த பின்னர் தான் கடன் அதிகரித்துள்ளது. திமுக ஆட்சி நிறைவு செய்யும்போது சுமார் ரூ.5 லட்சம் கோடி கடன் உள்ள மாநிலமாக தமிழகம் இருக்கும். இதுதான் ஸ்டாலின் ஆட்சியின் சாதனை.
தேர்தலின் போது தி.மு.க. 525 வாக்குறுதிகள் அளித்தார்கள். அதில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன? கல்விக் கடன் தள்ளுபடி, கியாஸ் சிலிண்டர் மானியம் என திமுக அறிவித்த வாக்குறுதிகள் என்னவானது?
வாக்குறுதிகளில் 4ல் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என தெரிவித்தது. ஆனால் செய்தார்களா? இன்று மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியிருக்கிறது. அதனை பாராட்ட திமுக அரசுக்கு மனமில்லை. அது பெயர் மாற்றம் குறித்து நாங்கள் கோரிக்கை வைத்து இருக்கிறோம். பழைய பெயர் தொடர வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம். ரெயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
நாடாளுமன்றத்தில் வாதாட வேண்டியதை, வாதாட வேண்டும். மாநில அரசுக்கு நிதி பிரச்சினை இருப்பதாக கேள்வி எழுப்ப வேண்டும். அவர்கள் நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்கவில்லை.
டீசல், பெட்ரோல் விலை குறைப்போம் என சொன்னார்கள் செய்தார்களா? செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் தி.மு.க. அரசு திட்டமிட்டே ஏமாற்றுகிறது. இதுபோல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது திமுக அரசு.
ஆனால் அண்ணா தி.மு.க. கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். விரைவில் அதிமுக தலைமையிலான ஆட்சி அமையும். அண்ணா தி.மு.க.தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு விரைவில் அறிவிக்கப்படும்.
தவெக தங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியது அவரது தனிபட்ட கருத்து. தவெக தூய கட்சியா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
ஸ்டாலின் கதறுவது ஏன்?
எஸ்ஐஆர் நடைமுறைக்குப் பின் ஒரு கோடி வாக்குகள் நீக்கப்பட்டதாக தவறான தகவல் கூறுகின்றனர். போலி வாக்காளர்கள், இரட்டை வாக்காளர்களைத்தான் தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.
எஸ்ஐஆர் பணிகள் என்பது அனைத்து கட்சிகளுக்கும் பொதுவானது. இதில் என்ன குறைபாடு உள்ளது? போலி வாக்காளர்கள் நீக்கப்பட வேண்டும் என்பதால் மட்டுமே எஸ்ஐஆருக்கு அண்ணா தி.மு.க. ஆதரவு தருகிறது.
21 ஆண்டு காலமாக எஸ்ஐஆர் பணி நடக்கவில்லை. இதனால் இறந்தவர்களின் பெயர்கள், போலி வாக்காளர்களை வைத்து திமுக இவ்வளவு நாள்களாக வெற்றி பெற்று வந்தது. இறந்தவர்கள் அனைவரும் திமுக காரர்களால் எழுந்து வந்து ஓட்டு போட ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் தற்போது எஸ்ஐஆர் பணி முழுமையாக முடிவடைந்து விட்டால் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுவிடுவார்கள். அதனால் தான் ஸ்டாலின் கதறுகிறார், பதறுகிறார். உண்மையான வாக்காளர்கள் விடுபட்டிருந்தால் படிவத்தை பூர்த்தி செய்து மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
![]()





