புதுடெல்லி, அக்.6-
இருமல் மருந்தால் குழந்தைகள் பலியான விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது மருந்து தயாரிப்பு நிறுவனங்களை மத்திய, மாநில அரசுகள் கூட்டாக ஆய்வு செய்ய, முடிவு செய்யப்பட்டது.
மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் மற்றும் சளி மருந்துகளால் குழந்தைகள் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே குழந்தைகள் இறப்பு தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளை பரிந்துரைக்கக்கூடாது என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியது.
இந்த நிலையில், நாடு முழுவதும் சுகாதாரத்துறையில் இருமல் மருந்துகளின் தரம் மற்றும் பகுத்தறிவு பயன்பாட்டை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு நேற்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உயர் அதிகாரிகளுடன் உயர்மட்ட கூட்டத்தை நடத்தி ஆலோசனை மேற்கொண்டது.
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீ வஸ்தவா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், அனைத்து மாநில சுகாதாரச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள் (சுகாதாரம்), மருந்துக்கட்டுப் பாட்டாளர்கள் மற்றும் மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், இருமல் மருந்து குடித்ததால் குழந்தைகள் சமீபத்தில் உயிரிழந்தது குறித்து கடுமையான கவலை தெரிவிக்கப்பட்டது. அனைத்து மருந்து நிறுவனங்களும் திருத்தப்பட்ட அட்டவணை எம்-ன் விதிகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் விதிகளை மீறும் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் மத்திய சுகாதார செயலாளர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
அதைப்போல மருந்து நிறுவனங்களை மத்திய, மாநில அரசுகள் கூட்டாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மருந்து பாதுகாப்பு, தரக்கட்டுப்பாடு மற்றும் பொது சுகாதார பாதுகாப்பு ஆகியவை முதன்மையான முன்னுரிமைகள் என்று மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியது. எதிர்காலத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து மருந்து உற்பத்தி வசதிகளை முழுமையாக ஆய்வு செய்து, இணங்கத் தவறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக, மருந்துகளின் பயன்பாடு தொடர்பான வழிமுறைகளை சுகாதார செயலாளர் வெளியிட்டார்.
![]()





