சென்னை, நவ. 28:
ஒரே நஞ்சுக்கொடி… ரத்த ஓட்டத்தில் மாறுபாடு… அரிதான கர்ப்பநிலை சிக்கல்களுடன் குறைப்பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளையும் காப்பாற்றியது எம்ஜிஎம் ஹெல்த்கேர் டாக்டர்கள் குழு.
ஒரே நஞ்சுக்கொடியைப் பகிர்ந்துகொண்டதால், ஒரு குழந்தைக்கு அதிக ரத்த ஓட்டமும், மற்றொரு குழந்தைக்கு குறைந்த ரத்தமும் சென்றதால் ஆபத்தான நிலை இருந்தது.
எடை அதிகமுள்ள ஒரு குழந்தை மட்டுமே பிழைக்கும் எனப் பிற மருத்துவமனைகள் கைவிட்ட நிலையில், எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவர்கள் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றி சாதனை படைத்திருக்கின்றனர். 28 -வார குறைப்பிரசவ இரட்டைக் குழந்தைககள் இவை.
ஆம்பூரைச் சேர்ந்த தம்பதி (மென்பொருள் பொறியாளர் தந்தை, கட்டிடக்கலை நிபுணர் தாய், எம்ஜிஎம் ஹெல்த்கேர்-க்கு வருவதற்கு முன்னதாகப் பல மருத்துவமனைகளை அணுகியுள்ளனர். “கருவில் உள்ள சிறிய குழந்தையின் நிலை மிக மோசமாக உள்ளது; உடல் எடையில் பெரிய குழந்தை மட்டுமே பிழைக்க வாய்ப்புள்ளது” என்றும், கருப்பையினுள்ளேயே அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என்றும் பிற மருத்துவமனைகள் அவர்களுக்கு கூறினார்கள்.
ஆனால், எம்ஜிஎம் ஹெல்த்கேரின் மகப்பேறியல் துறைத் தலைவர் டாக்டர் ஏ.ஜெயஸ்ரீ கஜராஜ் பச்சிளம் குழந்தைகள் மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் என்.சந்திர குமார் மற்றும் வளர்கரு மருத்துவப் பிரிவின் முதுநிலை நிபுணர் டாக்டர். ராதிகா ரமேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர், கருப்பைக்குள் எவ்வித அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளாமலேயே இரண்டு குழந்தைகளையும் பாதுகாப்பாக பிரசவிக்க செய்து பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியையும், மனநிம்மதியையும் தந்திருக்கின்றனர்.
‘சிசேரியன்’ அறுவை சிகிச்சை…
சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் மேற்கொள்ளப்பட்டது. பிறக்கும்போது 1,115 கிராம் மற்றும் 720 கிராம் எடையுடன் இருந்த அந்த குழந்தைகள், பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் 2 மாதங்கள் பராமரிக்கப்பட்டனர். சிகிச்சையின் முடிவில், இரட்டை குழந்தைகள் 2.040 கிலோ மற்றும் 1.500 கிலோ என்ற முறையில் ஆரோக்கியமான எடை வளர்ச்சியைப் பெற்று வீடு திரும்பினர்.
![]()





