சென்னை, ஆக. 27–
விநாயகர் சதுர்த்தி விழா இன்று தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமா கொண்டாட்டப்பட்டது.
இந்து மதத்தில் முழுமுதற் கடவுளாக போற்றப்படும் விநாயகப் பெருமான், ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தில் அவதரித்ததாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் இந்நாளையே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். அவ்வகையில் இன்று (27.8.2025) விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் குடும்பம் குடும்பாக சென்று விநாயகரை தரிசனம் செய்தனர். இதனால் கோவில்களில் வழக்கத்தைவிட இன்று கூட்டம் அதிகாக காணப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். வீடுகளில் விநாயகர் வழிபாடு மேற்கொள்ளும் மக்கள், விநாயகர் சிலைகளை வைத்து அலங்கரித்து, விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், லட்டு, அப்பம், அவல், பொரி, கடலை, சுண்டல் போன்ற நைவேத்யங்களை படைத்து பூஜை செய்தனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் மற்றும் பூஜைப்பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. குறிப்பாக, வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.
விதவிதமான விநாயர் சிலைகள்
இதேபோல் கோவில்கள் சார்பிலும், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஷ்வ இந்து பரிசத், சிவசேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் பிரமாண்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், விதவிதமான பொருட்களைக் கொண்டு, விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகளை செய்து பிரமிக்க வைத்துள்ளனர். அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் தரிசனம் செய்து வருகின்றனர்.
பிள்ளையார் பட்டியில்
சிறப்பு வழிபாடு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உலக புகழ்பெற்ற பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. குடவரை கோவிலான இங்கு விநாயகப்பெருமான் மற்ற இடங்களில் காணப்படுவதைப்போல நான்கு கைகளுடன் இல்லாமல் இரு கைகளுடன் காணப்படுகிறார். விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீப ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு அலங்காரமும் தீப ஆராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது .அதன் தொடர்ச்சியாக தங்க மூஷிஷ வாகனத்தில் நாதஸ்வரம் முழங்க விநாயகப் பெருமானும், வெள்ளி பல்லக்கில்அங்குச தேவரும், சிவனின் அஸ்திரதேவரும் புறப்பாடாகி கோவில் எதிரே உள்ள திருக்குளப்படித்துறையில் எழுந்தருளினர். அங்கு காலை 10 மணிக்கு பஞ்சாங்க முறைப்படி 11 வகையான திரவியங்களுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
மலைக்கோட்டையில்
150 கிலோ கொழுக்கட்டைதிருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 150 கிலோ எடையில் பிரம்மாண்ட கொழுக்கட்டை மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில் உள்ள உச்சிப் பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகர் கோயிலில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா விமா்சையாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி இன்று காலை உச்சிப்பிள்ளையார் மூலவர், மாணிக்க விநாயகர் மூலவர் சந்நிதிகளில், முறையே 75 கிலோ வீதம் மொத்தம் 150 கிலோ எடையில் பிரம்மாண்ட கொழுக்கட்டை படைக்கப்பட்டது.
இதே போல் தமிழகம் முழுவதும் உள்ள விநாயகர் கோவில்களில் நிவாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
![]()





