தூத்துக்குடி, ஆக. 29–
இனி எந்த இடத்திலும் விஜய் குறித்து பேசமாட்டேன் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தற்போதே ஆயுத்தமாகி வருகின்றன. திமுக கூட்டணி ஒருபக்கம், அதிமுக கூட்டணி ஒரு பக்கம் என தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளும் மறுபக்கம் முனைப்பு காட்டி வருவதால் அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கின்றன.
இதனிடையே பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் 2026 சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சி உடன் கூட்டணி என்பதை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 2026 சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சி உடன் கூட்டணி அமைப்போம் என்பதை விரைவில் அறிவிப்பேன் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரமேலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்த பிரேமலதா விஜயகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ராகுல் காந்தியின் போராட்டங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் வாக்குத் திருட்டு நடக்கிறது. அரசியலில் மட்டுமல்ல, தேர்தலிலும் அதிகார துஷ்பிரயோகம் தலைவிரித்தாடுகிறது. ஜனநாயக நாட்டில் நேர்மையான, முறையான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையமும், நீதிபதிகளும் முன்வர வேண்டும். அப்போதுதான் நாங்கள் தேர்தலில் நிற்பதற்கே ஒரு அர்த்தம் இருக்கும். கண் முன்னாலேயே ஓட்டுக்கு காசு கொடுப்பது, தில்லுமுல்லு செய்வது என அனைத்தும் நடக்கிறது. இதைப் பார்த்துக்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? பீகாரை மட்டும் குறை சொல்ல முடியாது, இந்தியா முழுவதும் தேர்தல் முறையில் மிகப்பெரிய சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும் நாடு முழுவதும் வாக்குத திருட்டு நடந்து கொண்டிருக்கிறது. இப்பதான் இவர்களுக்கு தேர்தல் ஆணையத்தில் வாக்கு திருட்டு நடப்பதாக தெரிகிறது. தேர்தலிலும் துஷ்பிரயோகம் நடக்கிறது. தேர்தல் ஆணையமும் நீதியரசர்களும் இணைந்து ஜனநாயக நாட்டில் முறையான தேர்தலை நடத்த வேண்டும். அப்போதுதான் தேர்தலில் நிற்பதற்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கும் ஒரு வழிவகை கிடைக்கும். கண் கூடாக வாக்குக்கு காசு கொடுப்பது தெரிகிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை பீகார் மட்டுமல்ல இந்தியா முழுவதும் சீர்திருத்தம் வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.2026 தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, “தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கின்றன. இன்னும் நிறைய காலம் இருக்கிறது. உரிய நேரத்தில் அதுபற்றி நாங்களே அறிவிப்போம்” என்று பதிலளித்தார்.பேட்டியின் முடிவில், விஜய் கட்சி மாநாடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து செய்தியாளர்கள் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு, பிரேமலதா விஜயகாந்த் கோபமடைந்தார்.
“நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். பத்திரிகையாளர்களுக்கு இதைத்தவிர வேறு கேள்வியே இல்லையா? நான் தினமும் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். ஒன்று கூட்டணி பற்றி கேட்கிறீர்கள், இல்லையென்றால் நடிகர் விஜய் பற்றி கேட்கிறீர்கள். இந்த இரண்டு கேள்விகளைத் தவிர வேறு எதுவும் உங்களுக்கு கேட்கத் தோன்றவில்லையா? நான் தூத்துக்குடிக்கு வந்திருக்கிறேன். இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை ஏன் கேட்க மாட்டேன் என்கிறீர்கள்? உப்பளத் தொழிலாளர்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளனர், சிறு, குறு தொழில்கள் நசிந்துள்ளன, கப்பல் தளம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் என எத்தனையோ இருக்கின்றன. பத்திரிகையாளர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண். நீங்கள் ஏன் மக்கள் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வர மறுக்கிறீர்கள்?அரசியல் என்பது மக்களுக்காகத்தான். ஆட்சி என்பதும் மக்களுக்காகத்தான். மக்கள் நலமாக இருந்தால்தான் இந்த நாடே நன்றாக இருக்கும். இதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். ஆனால் மக்கள் பிரச்சினையை தவிர்த்து விட்டு போகும் இடமெல்லாம் விஜய் குறித்தும் கூட்டணி குறித்தும் என்னிடம் கேள்வி கேட்கப்படுகிறது. இனி எந்த இடத்திலும் விஜய் குறித்து பேச மாட்டேன் என்று என்று கூறிவிட்டு, பிரேமலதா விஜயகாந்த் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
![]()





