நாடும் நடப்பும் ஆர்.முத்துக்குமார்
இந்திய வணிக உலகில் பெண்களின் தலைமைப் பொறுப்பு குறித்த நீண்டகால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அறிவிப்பாய், இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பு இருப்பதுடன் ஒரு புதிய அத்தியாயத்தையும் தொடங்கியுள்ளது.
ரோஹித் ஜாவாவுக்குப் பதிலாக, பிரியா நாயர் அந்நிறுவனத்தின் முதல் பெண் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனராகவும் நடப்பு ஆண்டின் ஆகஸ்ட் 1 முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இது வெறும் ஒரு பதவி உயர்வு மட்டுமல்ல, இந்தியப் பெரு நிறுவனங்களில் பெண்களின் தலைமைத்துவத்திற்கான ஒரு அதிமுக்கிய நகர்வாகும்.
பிரியா நாயர், 1995 ஆம் ஆண்டு அப்போதைய இந்துஸ்தான் லீவர் நிறுவனத்தில் தனது வர்த்தக உலகப் பயணத்தைத் தொடங்கினார். வீட்டுப் பராமரிப்பு, அழகு மற்றும் நல்வாழ்வுப் பொருட்கள் விற்பனைப் பிரிவுகளில் தனது தனித்துவமான முத்திரையைப் பதித்த அனுபவசாலி அவர்.
‘சிம்பியோசிஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிசினஸ் மேனேஜ்மென்ட்’டில் மார்க்கெட்டிங் துறையில் எம்பிஏ பட்டம் பெற்ற பிரியா நாயர், தனது 13 வயது மகள் மேஹக் மற்றும் கணவர் பிரியா மன்மோகனுடன் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையையும் நடத்தி வருகிறார்.
இந்த நியமனம், அவரது திறன், விடாமுயற்சி மற்றும் தலைமைத்துவத்திற்கு பாலினம் ஒரு தடையல்ல என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
இந்தியாவின் வணிக சாம்ராஜ்யங்களில் தலைமைப் பொறுப்பை பெண் தொழில்முனைவோருக்கு வழங்குவதில் ஒருவித தயக்கம் நிலவுவது உலகம் அறிந்ததே. ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா (HCL குழுமம்) மற்றும் தீபாலி கோயங்கா (வெல்ஸ்பன் குழுமம்) போன்ற பல நல்ல முன் உதாரணங்கள் இருந்தாலும், மும்பை, கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளில் பெண்கள் அமர்த்தப்படாதது மனவருத்தத்தைத் தருகிறது.
இந்தியாவின் 500 முன்னணி நிறுவனங்களில் வெறும் 1.6% மட்டுமே பெண் தலைமை நிர்வாக அதிகாரிகளைக் கொண்டுள்ளனர் என்பது இந்த ஏற்றத்தாழ்வை அப்பட்டமாகப் பிரதிபலிக்கிறது. ஆனால், பிரியா நாயரின் இந்த நியமனம், இந்த மனநிலையை மாற்றும் ஒரு புதிய சிந்தனைக்கு வழி வகுத்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முதுகெலும்பாகச் செயல்படும் இதர பிற பெரிய நிறுவனங்களிலும் பெண்களைத் தலைமைப் பொறுப்பில் அலங்கரிக்கும் முன்னேற்றப் போக்குக்கு இது ஒரு உந்துதலாக அமையும்.
இந்தியப் பெண்கள், தங்கள் வீடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்க முடியும். அதற்கு செய்ய வேண்டியவை வருமாறு:
பெண்கள் உயர்கல்வி பெறுவதற்கும், புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, தொழில்நுட்பம், நிதி மேலாண்மை, டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது, அவர்களை நவீனப் பொருளாதாரத்தின் அச்சாணியாக மாற்றும்.
பெண்கள் தங்கள் சொந்தத் தொழில்களைத் தொடங்கவும், அவற்றை வளர்க்கவும் தேவையான ஆதரவு, நிதி உதவி மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டும். சிறு மற்றும் குறுந்தொழில்களில் பெண்களின் பங்களிப்பு, உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
குடும்ப நிதி முடிவுகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். சேமிப்பு, முதலீடு மற்றும் நிதித் திட்டமிடல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, குடும்பங்களின் நிதி ஸ்திரத்தன்மையை மேம்படுத்தி, தேசிய சேமிப்பு விகிதத்தை அதிகரிக்கும்.
பணிபுரியும் தாய்மார்களுக்குக் குழந்தை பராமரிப்பு வசதிகள், நெகிழ்வான வேலை நேரம், பாலின சமத்துவமான பணிச்சூழல் போன்றவற்றை நிறுவனங்கள் வழங்க வேண்டும். இது பெண்களின் பணிப்பங்களிப்பை அதிகரித்து, அவர்களின் திறனை முழுமையாகப் பயன்படுத்த உதவும்.
கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பெண்கள் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்பட வேண்டும். ஆன்லைன் வணிகம், டிஜிட்டல் கல்வி, இணையவழி நிதிச் சேவைகள் ஆகியவை பெண்களின் பொருளாதார சுதந்திரத்தையும், தேசிய டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்தும்.
பெண்களுக்கு தலைமைப் பண்புகளை வளர்க்கும் பயிற்சிகள், வழிகாட்டுதல் திட்டங்கள், நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இது அவர்களை வெறும் பணியாளர்களாக இல்லாமல், முடிவெடுக்கும் அதிகாரிகளாகவும், மாற்றத்தை உருவாக்கும் தலைவர்களாகவும் மாற்றும்.
பிரியா நாயரின் நியமனம் ஒரு தொடக்கம் மட்டுமே. இது இந்தியப் பெருநிறுவனங்கள் தங்கள் தலைமைத்துவக் கட்டமைப்பை மறுபரிசீலனை செய்யவும், பாலின சமத்துவத்தை வெறும் கொள்கை அறிக்கையாக இல்லாமல், நடைமுறை யதார்த்தமாக மாற்றவும் ஒரு தூண்டுதலாக அமைய வேண்டும். இந்தியப் பெண்கள் தங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்தும் போதுதான், நமது தேசம் உண்மையான பொருளாதார வல்லரசாக மாறும்.
![]()





