செய்திகள்

இந்திய கடலோர பாதுகாப்புப் படையுடன் கூட்டுப் பயிற்சி: ஜப்பான் போர்க் கப்பல் சென்னை வருகை

Makkal Kural Official

வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை, ஜூலை.8-

இந்திய கடலோர பாதுகாப்பு படையுடன் கூட்டுப் பயிற்சி செய்வதற்காக ஜப்பான் போர் கப்பல் சென்னை வந்துள்ளது. அந்த கப்பலில் இருந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையே கடந்த 2006-ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, இருநாட்டு கடலோர பாதுகாப்பு படைக்கு இடையேயான பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கூட்டுப் பயிற்சி நடத்துதல், பயிற்சி பரிமாற்றம், பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கில் பங்கேற்றல், உயர்மட்ட அதிகாரிகள் நட்பு நாடுகளுக்கு வருகை தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று இருந்தன.

அந்தவகையில், இந்திய கடலோர பாதுகாப்பு படையுடன் கூட்டுப் பயிற்சி செய்வதற்காக ஜப்பான் கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான ‘இட்சுகுஷிமா’ போர் கப்பல் நேற்று சென்னை துறைமுகம் வந்தது. அந்த கப்பலின் கமாண்டிங் அதிகாரி நயோகி மிசோகுஜி உள்பட அதிகாரிகளுக்கு பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னைக்கு ஒருவார பயணமாக வந்திருக்கும், ‘இட்சுகுஷிமா’ போர் கப்பல் நடுக்கடலில் கூட்டுப் பயிற்சி ஒத்திகையில் ஈடுபடுவதோடு, இருநாட்டு வீரர்கள் இடையே கலாச்சார மற்றும் தொழில்சார்ந்த கலந்துரையாடல்கள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

இதேபோல ஜப்பான் கடலோர பாதுகாப்பு படை துணை கமாண்டிங் அதிகாரி ஹிரோகி கனோசி தலைமையிலான உயர்மட்டக்குழு வினரும் வந்துள்ளனர்.

அந்த குழுவினரோடு, கடலோர பாதுகாப்பு படையின் கிழக்கு மண்டல இயக்குனர் ஜெனரல் பரமேஸ் சிவமணி, கூடுதல் இயக்குனர் ஜெனரல் டோனி மைக்கேல் உள்பட அதிகாரிகள் குழுவினர் கலந்துரையாடுகின்றனர். இந்த பயணத்துக்கான ஒருங்கிணைப்பு பணிகளை கடலோர பாதுகாப்பு படையின் கிழக்கு மண்டல ஐ.ஜி. தத்விந்தர் சிங் சைனி மேற்கொண்டு வருகிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *