விண்டோக், ஜூலை.10-
”ஏழை பழங்குடியினத்தை சேர்ந்த மகள், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவராக இருப்பது இந்திய அரசியலமைப்பின் சக்தி. ஏழை குடும்பத்தில் பிறந்த என்னை போன்ற ஒருவருக்கு மூன்று முறை பிரதமராக வாய்ப்பு கிடைத்தது அரசியலமைப்பின் சக்தி,” என நமீபியா பார்லிமெண்டில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார்.
நமீபியா நாட்டு அதிபர் நண்டி-நதைத்வாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பிரதமர் மோடி கடந்த 2-ந் தேதி முதல் கானா, அர்ஜென்டினா உள்பட 5 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் கடைசி நாடாக நமீபியாவுக்கு நேற்று சென்றார்.
அதிபர் மாளிகை சென்ற பிரதமர் மோடிக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நமீபியா அதிபர் நண்டி-நதைத்வாவை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். உயர்மட்டக்குழு மட்டத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா-–நமீபியா இடையேயான உறவு முழு அளவில் மறுஆய்வு செய்யப்பட்டது.
மேலும் டிஜிட்டல் தொழில்நுட்பம், ராணுவம், பாதுகாப்பு, விவசாயம், சுகாதாரம், கல்வி, முக்கிய கனிமங்கள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும் வர்த்தகம், எரிசக்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் போன்ற துறைகளிலும் தொடர்புகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த சந்திப்பின்போது இந்தியாவின் சிவிங்கிப்புலி திட்டத்துக்கு நமீபியா அளித்த ஆதரவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கு இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து போடப்பட்டன. மேலும் இந்தியாவின் டிஜிட்டல் பணபரிவர்த்தனை அமைப்பான யு.பி.ஐ.யை இந்த ஆண்டு இறுதியில் நமீபியாவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதாக அந்த நாடு அறிவித்தது.
உயரிய விருது
பின்னர் பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் தி மோஸ்ட் என்சியன்ட் வெல்விட்சியா மிராபிலிஸின்’ விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அதிபர் வழங்கி கவுரவித்தார்.
இதனைத் தொடர்ந்து நமீபியா பார்லிமெண்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். பார்லிமெண்ட்டுக்கு வந்த பிரதமர் மோடியை அந்நாட்டு எம்.பி.க்கள் எழுந்து நின்று வரவேற்றனர்.
அங்கு பிரதமர் மோடி பேசியதாவது:
ஜனநாயகத்தின் கோவிலான இந்த அவையில் பேசுவது எனக்கு பெருமை அளிக்கிறது. இந்த பெருமையை அளிப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயகத்தின் தாயாக விளங்கும் நாட்டின் பிரதிநிதியாக, 140 கோடி இந்திய மக்களின் ஆசிகளை உங்கள் முன் கொண்டு வந்துள்ளேன்.
நமீபியாவில் முதல் பெண் அதிபரை தேர்வு செய்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரலாற்று சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலும் பெண் ஜனாதிபதியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். உங்களின் மகிழ்ச்சியையும் பெருமையையும் பகிர்ந்து கொள்கிறோம். ஏழை பழங்குடியினத்தை சேர்ந்த மகள், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவராக இருப்பது இந்திய அரசியலமைப்பின் சக்தி. ஏழை குடும்பத்தில் பிறந்த என்னை போன்ற ஒருவருக்கு 3 முறை பிரதமராக வாய்ப்பு கிடைத்ததும் அரசியலமைப்பின் சக்தி.
இரு நாட்டு மக்களின் நட்புகளை பிரதிபலிக்கும் வகையில் விளங்கும் நமீபியாவின் உயரிய விருதை பெற்றுக் கொள்வதில் மகிழ்ச்சி. நமீபியாவின் கடினமான மற்றும் நேர்த்தியான தாவரங்களை போல், நமது நட்பும் காலத்தை கடந்து நிற்கிறது.
இரு தரப்பு வர்த்தகம்
800 மில்லியன் டாலர்
இந்தியாவின் யுபிஐ தொழில்நுட்பத்தை ஏற்ற முதல் நாடாக நமீபியா இருப்பது மிகழ்ச்சி. நமது இரு தரப்பு வர்த்தகம் 800 மில்லியன் டாலரை கடந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆப்ரிக்காவுக்கு மருந்துகளை வழங்கி ஆதரவாக இருந்தோம். இந்தியாவின் ஆரோக்கிய மந்திரி புதுமை ஆதரவு திட்டத்தின் கீழ் ஆப்ரிக்காவுக்கு மருத்துவமனைகள், கருவிகள், மருந்துகள், பயிற்சிகள் ஆகியவற்றை வழங்கி உதவினோம். புற்றுநோய் சிகிச்சைக்கு தேவையான உதவிகளை நமீபியாவுக்கு வழங்க இந்தியா தயாராக இருக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் 15 நாடுகளில் பயன்படு கிறது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.
அதிகாரத்தால் அல்ல. ஒத்துழைப்பால் வரையறுக்கப்பட்ட எதிர்காலத்தை உருவாக்குவோம். ஆதிக்கத்தால் அல்ல, சமத்துவத்தினால் எதிர்காலத்தை உருவாக்குவோம். இதுவே நமது தொலைநோக்குப் பார்வையின் உணர்வாக இருக்கும். நாம் போராடிய சுதந்திரத்தை மட்டுமல்ல, நாம் ஒன்றாகக் கட்டியெழுப்பும் எதிர்காலத்தையும் நமது மக்கள் பெறட்டும். இவ்வாறு மோடி பேசினார்.
–––––
17 நாடுகளின் பார்லிமெண்டில்
உரை நிகழ்த்திய பிரதமர் மோடி
பா.ஜ.க. வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், கானா, டிரினிடாட் அன்ட் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளின் பார்லிமெண்டில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தியுள்ளார். இதன்மூலம் 17 நாடுகளின் பார்லிமெண்டில் உரை நிகழ்த்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் பிரதமர்கள் ஒட்டுமொத்தமாகவே 17 நாடுகளின் பார்லிமெண்ட்களில் உரையாற்றியுள்ளனர். உலகளவில் மிகவும் மதிக்கப்படும் இந்திய தலை வர்களில் ஒருவர் என்பதை மோடி மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.
காங்கிரஸ் பிரதமர்களான மன்மோகன் சிங் 7 முறையும், இந்திரா காந்தி 4 முறையும், நேரு 3 முறையும், ராஜிவ் 2 முறையும், பி.வி.நரசிம்மா ராவ் ஒரு முறை என மொத்தம் 17 நாடுகளின் பார்லிமெண்டில் உரை நிகழ்த்தியுள்ளனர்.
பிரதமர் மோடி, இதுவரை சர்வதேச நாடுகளிடம் இருந்து 27- உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.
![]()





