செய்திகள்

இந்தியா–பாகிஸ்தான் போரின்போது மோடியுடன் பேசினேன்: வர்த்தகத்தை நிறுத்துவதாக எச்சரித்தேன்

Makkal Kural Official

புதுடெல்லி, ஆக. 27–

இந்தியா–பாகிஸ்தான் சண்டையின்போது இந்திய பிரதமர் மோடியுடன் பேசியதாக டிரம்ப் புதிய தகவலை தெரிவித்துள்ளார்.

மீண்டும் போர் ஏற்பட்டாலும் நானே தடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிப்பதாகக் கூறி, இந்தியா மீது 50 சதவிகித வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். இந்த வரிவிதிப்பானது, இன்று முதல் அமலுக்கு வந்தது. இதனிடையே டிரம்ப்பின் அழைப்பை பிரதமர் மோடி தொடர்ந்து நிராகரித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக பிரதமர் மோடியை 4 முறை டிரம்ப் தொடர்புகொள்ள முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், டிரம்ப்பின் அழைப்பை பிரதமர் மோடி நிராகரித்ததாக ஜெர்மன் செய்தி கூறுகிறது. இதனிடையே, இந்தியா – பாகிஸ்தான் போரில் 1,314 கோடி மதிப்பிலான விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் தெரிவித்திருப்பது மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது, இந்தியா – பாகிஸ்தான் போர் குறித்தும் அந்நாட்டு அதிபர் டிரம்ப் பேசினார்.

போரை நிறுத்துவேன்

இதுகுறித்து அவர் பேசுகையில், இந்தியா -பாகிஸ்தான் மோதலின்போது மோடியிடம் தனிப்பட்ட முறையில் பேசினேன். அவரிடம் உங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன பிரச்சனை?’ என்று கேட்டேன். இரு நாடுகள் இடையே வெவ்வேறு பெயர்களில் பிரச்சனை இருந்து வருகிறது. இரு நாடுகளிடமும் நீங்கள் வர்த்தகம் செய்ய விரும்புகிறீர்களா? தொடர்ந்து சண்டையிட்டால், நாங்கள் உங்களுடன் எந்த வர்த்தகமும் செய்ய விரும்பவில்லை என்று கூறினேன். அல்லது தலைசுற்றும் அளவுக்கு உங்கள் மீது அதிக வரி விதிக்கப்போகிறோம் என்று கூறினேன்.

நீங்கள் இருவரும் ஒரு அணு ஆயுதப் போருக்குக் காரணமாக இருக்கப் போகிறீர்கள் என்று கூறி, நாளை என்னை மீண்டும் அழைக்கவும் என்று கூறினேன். ஆனால் அடுத்த 5 மணிநேரத்திலேயே போர் முடிவுக்கு வந்தது.ஒருவேளை இரு நாடுகள் இடையே மீண்டும் சண்டை தொடங்கலாம். அதுபற்றி எனக்குத் தெரியாது. நான் அப்படி நினைக்கவில்லை. ஆனால் அது நடந்தால் நான் அதையும் நிறுத்துவேன். போரை நாம் அனுமதிக்கக் கூடாது. அது நல்லதல்ல.

போரில் நிறைய ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 150 மில்லியன் டாலர் மதிப்பிலான விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 7 அல்லது அதற்கு மேற்பட்ட விமானங்களாக இருக்கலாம். காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்கி அழித்தது. இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் ராணுவங்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சண்டை 4 நாட்களுக்கு பிறகு நிறுத்தப்பட்டது. இதற்கிடையே இந்தியா–பாகிஸ்தான் போரை வர்த்தகத்தை காரணம் காட்டி நான்தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதை திட்டவட்டமாக மறுத்த இந்தியா, பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் தாக்குதலை நிறுத்தினோம் என்று தெரிவித்தது.ஆனால் போரை நான்தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் 30-க்கும் மேற்பட்ட முறை கூறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *