செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் இடையே நான் சொன்னதால் தான் போரை நிறுத்தினார்கள்

Makkal Kural Official

நியூயார்க், அக். 7–

கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதலை தான் சொன்னதால் அவர்கள் நிறுத்திக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

வரிகளை வைத்தே அமைதியே ஏற்படுத்துகிறோம் என்றும் அவர் கூறினார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சண்டை உள்பட உலக அளவில் 7 போர்களை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். இந்தியா இதனை திட்டவட்டமாக மறுத்தாலும் டிரம்ப் மீண்டும் மீண்டும் இதே கருத்தை கூறி வருகிறார்.

இந்த நிலையில், போர்களை நிறுத்துவதற்கு வரிகளே காரணமாக இருந்ததாக டிரம்ப் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப் கூறியிருப்பதாவது:–

“அமெரிக்காவுக்கு வரி விதிப்பு முக்கியமான வருவாயாக அமைந்துள்ளது. அதோடு அதன் மூலம் சர்வதேச அளவில் அமைதியை நிலைநாட்ட எங்களால் முடிகிறது. வரிகள் காரணமாக பல பில்லியன் டாலர்கள் வருவாய் மட்டுமல்லாமல் அமைதியையும் ஏற்படுத்த முடிகிறது.

வரி விதிப்பு விவகாரத்தை சுட்டிக்காட்டி போர்களை நான் நிறுத்தி உள்ளேன். அணு ஆயுத பலம் கொண்ட இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலில் ஈடுபட்டன. இதில் 7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்தச் சூழலில் நான் அவர்களிடம் என்ன சொன்னேன் என்பதை இங்கு சொல்ல வேண்டாம் என கருதுகிறேன். ஆனால் நான் சொன்னது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உடனடியாக சண்டையை நிறுத்தினார்கள்.

நிச்சயம் அதில் வரி விதிப்பு மற்றும் வணிகம் உள்ளது என்றார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலை தான் நிறுத்தியதாக கடந்த மே 10-ம் தேதிக்கு பிறகு பல்வேறு முறை டிரம்ப் சொல்லி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோடு உலக அளவில் நடைபெறும் பல்வேறு நாடுகளுக்கு இடையிலான போரை தான் நிறுத்தியதாக டிரம்ப் தொடர்ந்து சொல்லி வருகிறார்.

இந்த போர் நிறுத்தத்தில் மூன்றாம் தரப்பினரின் தலையீடு இல்லை என்றும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நேரடி பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் ஏற்பட்டது என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *