பீஜிங், ஆக 31–
‘‘இந்திய – சீன எல்லையில் இருந்து இரு நாடுகளும் படைகளை திரும்ப பெற்றதால் அமைதி ஏற்பட்டுள்ளது’’ என அதிபர் ஜி ஜின்பிங் உடன் சந்திப்புக்கு பிறகு பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
எல்லை மேலாண்மை விஷயத்தில் நமது சிறப்பு பிரதிநிதிகளுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்தும் தொடங்கப்படுகிறது. நமது நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புடன், 2.8 பில்லியன் மக்களின் நலன்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது மனிதகுலத்திற்குத் தேவை என்றும் கூறினார் மோடி.
ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, 7ஆண்டுகளுக்கு பின் நேற்று சீனா சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், அங்குள்ள ஹோட்டலுக்கு சென்ற பிரதமரை வரவேற்கும் விதமாக, இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
எஸ்சிஓ அமைப்பின் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.கடந்த 2020ல், ஜம்மு – காஷ்மீரின் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன படைகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதை அடுத்து, இருநாட்டு உறவும் பாதிக்கப்பட்டது.
பல கட்ட பேச்சுவார்த்தை தொடர்ந்து எல்லைப் பகுதியில் இருநாட்டு வீரர்களும் ரோந்து பணியில் ஈடுபடலாம் என கடந்தாண்டு முடிவு செய்யப்பட்டதை அடுத்து மோதல் முடிவுக்கு வந்தது. இந்த சூழலில், சீன அதிபர் ஜின்பிங் உடன் பிரதமர் மோடி இன்று பேச்சு நடத்தினார்.
பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர உணர்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை முன்னெடுத்து செல்ல உறுதி பூண்டிருப்பதாக பிரதமர் மோடி சீன அதிபரிடம் தெரிவித்தார்.
பரஸ்பர உறவால்
280 கோடி பேர் பலன்
பின்னர் பிரதமர் மோடி கூறியதாவது:–
கடந்த ஆண்டு ரஷ்யாவின் கசான் நகரில் ‘பிரிக்ஸ்’ உச்சிமாநாட்டின்போது நடைபெற்ற சந்திப்பில், இந்தியா–சீனா இடையிலான உறவுகளை நேர்மறையான திசையில் கொண்டு செல்வது குறித்து பேசப்பட்டது.
இந்திய – சீன எல்லையில் இருந்து இரு நாடுகளும் படைகளை திரும்ப பெற்றதால் அங்கு அமைதி, உறுதி நிலை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தியா–சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவு மனிதகுலத்தின் நலனுக்கு வழிவகுக்கும். மேலும் உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என உறுதிபூண்டுள்ளோம். இருநாட்டு உறவால் 280 கோடி பேருக்கு பலன் கிடைத்துள்ளது
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெற்றிகரமான தலைவராக சீனா பொறுப்பேற்றதற்கு நான் உங்களை வாழ்த்துகிறேன். சீனாவுக்கு வருகை தர அழைப்பு விடுத்ததற்கும் இன்று நடைபெற்ற சந்திப்புக்கும் நன்றி” என்று தெரிவித்தார்.
டிராகனும் – யானையும்
ஒன்றிணைய வேண்டும்
சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியதாவது:–
மாற்றத்தை நோக்கி உலக நாடுகள் சென்றுகொண்டிருக்கின்றன. சீனாவும் இந்தியாவும் மிகப்பெரிய அளவில் நாகரீகமடைந்த நாடுகள். உலகளாவிய தெற்கின் ஒரு பகுதியாகவும், அதிக மக்கள் தொகை கொண்ட இரு நாடுகளாகவும் இருக்கிறோம்” எனக் குறிப்பிட்டார்.
மேலும், ”சிறந்த அண்டை நாடுகளாகவும் நல்ல நண்பர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம். டிராகனும், யானையும் ஒன்றாக இணைய வேண்டும்” எனவும் தெரிவித்தார். .இத்துடன், கடந்த ஆண்டு ரஷியாவின் கஸான் நகரில் நடைபெற்ற வெற்றிகரமான மாநாட்டில் பங்கேற்றது குறித்து நினைவு கூர்ந்தார். மேலும், இந்தியா – சீனா இடையிலான ராஜதந்திர உறவின் 75வது ஆண்டின் நிறைவையும் சுட்டிக்காட்டினார். இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான உறவை நீண்ட கால கண்ணோட்டத்தில் முன்னெடுத்துச்செல்லும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சீன அதிபர் குறிப்பிட்டார்.
![]()





