செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து

Makkal Kural Official

மஸ்கட், டிச.19:

பிரதமர் மோடி முன்னிலையில், இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, ஓமனுக்கு ஏற்றுமதி ஆகும் 99 சதவீத இந்திய பொருட்களுக்கு ஓமன் வரி விதிக்காது.

ஜோர்டான், எத்தியோப்பியா ஆகிய நாடுகளை தொடர்ந்து ஓமன் தலைநகர் மஸ்கட் சென்ற பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா-–ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியா சார்பில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயலும், ஓமன் சார்பில் அந்நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி குவாயிஸ் பின் முகமது அல் யூசேப்பும் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தம், ‘விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

இதன்படி, ஓமனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 99 சதவீத இந்திய பொருட்களுக்கு ஓமன் வரி விதிக்காது. வரியின்றி அப்பொருட்களை அனுமதிக்கும். தொழிலாளர் உற்பத்தி பொருட்களான நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், ஜவுளி பொருட்கள், தோல் பொருட்கள், காலணிகள், விளையாட்டு பொருட்கள், பிளாஸ்டிக், மரச்சாமான்கள், வேளாண் பொருட்கள், என்ஜினீயரிங் பொருட்கள், மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், ஆட்டோமொபைல் உள்ளிட்டவற்றுக்கு முழுமையான வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. இவற்றில் 97.96 சதவீத பொருட்களுக்கு ஓமன் உடனடியாக வரிவிலக்கு அளிக்கும்.

அதே சமயத்தில், இந்தியாவுக்கு ஓமன் ஏற்றுமதி செய்யும் 94.81 சதவீத பொருட்களுக்கு இந்தியா வரி விதிக்காது. அப்பொருட்களை வரியின்றி இந்திய சந்தையில் அனுமதிக்கும்.

பேரீச்சம்பழம், மார்பிள் கற்கள், பெட்ரோகெமிக்கல் பொருட்கள் ஆகிய ஓமன் பொருட்களுக்கு இந்தியா வரியை குறைக்கும். முதல்முறையாக, இந்தியாவின் பாரம்பரிய மருந்துகளை வர்த்தக ஒப்பந்த பட்டியலில் இந்தியா சேர்த்துள்ளது. அந்த மருந்துகள், ஓமனுக்கு வரிச்சலுகையுடன் அளிக்கப்படும்.

இருப்பினும், இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க பால் பொருட்கள், தேயிலை, காபி, ரப்பர் உள்ளிட்ட வேளாண் பொருட்கள், சாக்லெட், புகையிலை பொருட்கள், தங்கம்-வெள்ளி கட்டிகள், ஆபரணங்கள், காலணிகள், விளையாட்டு பொருட்கள், அடிப்படை உலோகங்களின் கழிவுகள் ஆகியவற்றுக்கு இந்தியா எந்த வரிச்சலுகையும் அளிக்காது. அப்பொருட்கள், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் வரம்புக்குள் சேர்க்கப்படவில்லை.

இந்த ஒப்பந்தம், அடுத்த நிதியாண்டின் முதலாவது காலாண்டில் அமலுக்கு வருகிறது.

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தநிலையில், இவ்வளவு வரிச்சலுகைகளுடன் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

முன்னதாக, மஸ்கட்டில் நடந்த இந்தியா-–ஓமன் வர்த்தக உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:-

இன்று நாம் வரலாற்று சிறப்பு மிக்க முடிவை எடுக்கிறோம். அதன் எதிரொலி, இனிவரும் தசாப்தங்களிலும் எதிரொலிக்கும். தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இருதரப்பு உறவுக்கு புதிய திசையையும், ஆற்றலையும் அளிக்கும்.

இந்தியா வளரும்போது அதன் நட்பு நாடுகளும் வளர உதவுகிறது. உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதன்மூலம் ஒட்டுமொத்த உலகமும் பலன் அடையும். ஓமனுக்கு கூடுதலான பலன் கிடைக்கும்.

ஏனென்றால், நாம் நெருங்கிய நட்பு நாடுகள் மட்டுமின்றி, கடல்சார் அண்டை நாடுகள் ஆகும்.

இந்த வளர்ச்சி பயணத்தில் ஓமன் நிறுவனங்கள் பங்குதாரராக இணைய வேண்டும். இந்திய பொருளாதாரம் கடந்த 11 ஆண்டுகளாக அதிவேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தியா, தனது கொள்கைகளை மட்டுமின்றி, தனது பொருளாதார மரபணுவையும் மாற்றி உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *