செய்திகள்

இந்தியாவை பாகிஸ்தான் தாக்கியதற்கு ஆதாரத்தை காட்ட முடியுமா?

Makkal Kural Official

வெளிநாட்டு ஊடகங்களுக்கு அஜித்தோவல் கேள்வி

சென்னை, ஜூலை.12–-

பாகிஸ்தான் மீதான போர் தொடர்பான உண்மைகளை, வெளிநாட்டு ஊடகங்கள் தவறாக காட்டுகின்றன. இந்தியாவை பாகிஸ்தான் தாக்கியத்திற்கு ஏதாவது ஒரு ஆதாரத்தை அவர்களால் காட்ட முடியுமா, என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி.யின் 62-வது பட்டமளிப்பு விழா, கிண்டி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், முதன்மை விருந்தினராக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், சிறப்பு விருந்தினராக பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில், 3 ஆயிரத்து 227 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

தொழில்நுட்ப பட்டப்படிப்பில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய மாணவர்களுக்கு, ஜனாதிபதி விருது, கவர்னர் விருது, பாரத ரத்னா விஸ்வேஸ்வராய நினைவு விருது ஆகிய விருதுகளை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் வழங்கி கவுரவித்தார்.

விழாவில், அவர் பேசியதாவது:-

இன்று பட்டம் பெறும் இளம் பட்டதாரிகளுக்கு என்னுடைய வாழ்த்துகள். உங்கள் முன்பு காத்திருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி, நாட்டிற்காகவும், இந்த சமூகத்திற்காகவும் நீங்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும்.

நாட்டின் 100-வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்கு இன்னும் 22 ஆண்டுகள் இருக்கின்றன. 100-வது சுதந்திர தினவிழா கொண்டாடத்தின்போது, நாட்டின் ஜி.டி.பி. 33 டிரில்லியன் டாலராக இருக்கும். நாம் கல்வி, திறன் ஆகியவற்றில் முன்னிலையில் இருக்கிறோம்.

இளம் பட்டதாரிகள் இந்தியாவின் நாகரிக அடையாளத்தை உயிருடன் வைத்திருந்த வரலாற்றுப் போராட்டங்கள் மற்றும் தியாகங்களை நினைவில் கொள்ள வேண்டும். நாம் உள்நாட்டு தொழில்நுட்ப வளர்ச்சிகளை மேம்படுத்தி வருகிறோம். ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை உள்நாட்டு தொழில்நுட்பத்தால் மேற்கொள்ளப் பட்டுள்ளதை நினைத்து பெருமைப்படுகிறோம். பிரம்மோஸ் மற்றும் வான் தடுப்பு பாதுகாப்பு, தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவை சிறப்பாக செயல்பட்டது.

பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதல்

பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை மட்டுமே இலக்காக கொண்டு நாம் தாக்குதல் நடத்தினோம். அந்த 9 முகாம்களும் எல்லை பகுதியில் இருந்து தொலைவில் இருக்கின்றன. ஆனாலும், சரியாக கணித்து துல்லியமாக தாக்குதல் நடத்தி உள்ளோம். பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை 23 நிமிடங்களில் முடித்துவிட்டோம்.

பாகிஸ்தான் உள்பட வெளிநாட்டு ஊடகங்கள் இந்தியா மீது பாகிஸ்தான் பாதிப்புகள் ஏற்படுத்தியதாக செய்திகள் வெளியிட்டன. இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டது போன்ற ஒரு புகைப்படத்தை அவர்களால் ஆதாரமாக வெளியிட முடியுமா? ஒரு கண்ணாடி உடைந்ததற்கான ஆதாரங்களை காண்பிக்க முடியுமா? நாம், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது நடத்திய தாக்குதலுக்கான ஆதாரங்களை, தாக்குதலுக்கு முன் மற்றும் தாக்குதலுக்கு பின் என சேகரித்துள்ளோம். பாகிஸ்தான் விமானபடைத்தளம் மீது நாம் நடத்திய தாக்குதல் சரி செய்யப்படவில்லை. அதுவே நம் நடவடிக்கையின் சாட்சி.

இவ்வாறு அவர் பேசினார்.

பட்டமளிப்பு விழாவுக்கு பிறகு, சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்திய அறிவுசாரமைப்பு வழித்தடத்தை அஜித்தோவல் தொடங்கி வைத்தார். இந்த விழாக்களில், சென்னை ஐ.ஐ.டி. ஆட்சியாளர்கள் குழு தலைவர் பவன் கோயங்கா, ஆடிட்டர் குருமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *