பெய்ஜிங், ஜூலை 1–
இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து விவாதங்களில் ஈடுபட்டு எல்லையில் அமைதியை நிலைநிறுத்தத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு, சீனாவின் துறைமுக நகரான கிங்டாவோவில் கடந்த 26ம் தேதி நடைபெற்றது. மாநாட்டுக்கிடையே, சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் அட்மிரல் டோங் ஜுன்னை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து, இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
எல்லைகளை நிர்ணயிப்பது உள்ளிட்ட சிக்கலான பிரச்சினைகளை புதிய பேச்சுவார்த்தைகள் மூலம் இந்தியாவும் சீனாவும் தீர்க்க வேண்டும். இந்திய–சீன உறவில் நேர்மறையான உத்வேகத்தை பராமரிப்பதுடன், புதிய சிக்கல்கள் எழாமல் தவிர்ப்பது இருதரப்பின் பொறுப்பு என்றும் ராஜ்நாத் சிங் அப்போது வலியுறுத்தினார்.
ராஜ்நாத் சிங்கின் இக்கருத்துகள் குறித்து சீன வெளியறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் அளித்த பதிலில், ‘எல்லை நிர்ணயம் மற்றும் மேலாண்மை தொடர்பாக இந்தியாவுடன் தொடர்ந்து விவாதிக்க, சீனா எப்போதும் தயாராக உள்ளது. இதன்மூலம், இருதரப்பும் சேர்ந்து எல்லையில் அமைதியை உறுதிப்படுத்தவும், எல்லைத் தாண்டிய ஒத்துழைப்புகளை ஊக்குவிக்கவும் முடியும்.
இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினை சிக்கலானது. எனவே, அதற்கு தீர்வு காண காலமெடுக்கும். இதில் நேர்மறையான விஷயம் என்னவெனில், இரு நாடுகளும் ஏற்கெனவே பேச்சுவார்த்தைகளை ராஜீய, ராணுவம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தொடங்கியுள்ளன. எல்லையில் அமைதியைப் பேண இரு நாடுகளும் ஒரே திசையில் செயல்பட்டு, தொடர்ந்து தொடர்பில் இருக்கும் என்று நம்பிக்கையுள்ளது என்றார்.
இந்தியா-–சீனா இடையே கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் படைகளை விலக்கிக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையொப்பமிட்டன. இதையடுத்து இருதரப்பு உறவுகளை புதுப்பிக்கும் முயற்சியில் இரு நாடுகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
#trending news #trending news tamil #makkalkural #மக்கள்குரல் #சென்னை
![]()





