செக்கர்ஸ், செப். 19–
‘‘இந்தியாவுடன் தனக்கு மிக நெருக்கமான உறவு உள்ளது’’ என்றும், பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட நட்பு கொண்டிருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் கிராமப்புற இல்லமான செக்கர்ஸில் அவருடன் இணைந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:–
“நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக உள்ளேன், நான் இந்தியப் பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட முறையில் நல்லுறவை கொண்டுள்ளேன். சமீபத்தில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க நான் அவரிடம் தொலைபேசியில் பேசினேன்.
எங்களுக்கு இடையே நல்ல உறவு உள்ளது. நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு, அவர் ஒரு அழகான பதில் அறிக்கையையும் வெளியிட்டார். ஆனால் நான் அவர்களுக்கு அதிகளவில் வரிகளை விதித்துள்ளேன்.
உக்ரைனுடனான தற்போதைய மோதலில் புதின் எனக்கு ‘மிகப்பெரிய ஏமாற்றம்’ தந்துள்ளார். மிக எளிமையாகச் சொன்னால், எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்தால், புதின் போரை விட்டு வெளியேறிவிடுவார். அவருக்கு வேறு வழியில்லை. சீனா தற்போது அமெரிக்காவுக்கு மிகப் பெரிய வரியை செலுத்துகிறது, ஆனால் நான் இன்னும் சில தடைகளையும் விதிக்க தயாராக இருக்கிறேன். எண்ணெய் மூலமான வருவாய் குறைந்தால் மிக எளிமையாக ரஷ்யா இந்த போருக்கு தீர்வு காணும். வேறுவழியில்லை. உக்ரைன் போரை தீர்ப்பது எளிதானது என நினைத்தேன். புடின் என்னை ஏமாற்றிவிட்டார்.
நாங்கள் இதுவரை 7 மோதல்களை முடிவுக்கு கொண்டுவந்தோம், அவற்றில் பெரும்பாலானவை தீர்க்கக்கூடியவை என்று முதலில் கருதப்படவில்லை. நாங்கள் இந்தியா – பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டு வந்தோம், அது இரண்டு அணுசக்தி நாடுகள்.
அந்த மோதலை முடிவுக்கு கொண்டுவந்தது முற்றிலும் வர்த்தகத்திற்காக மட்டுமே. அவர்கள் கடுமையாக மோதிக்கொண்டிருந்தபோது, நீங்கள் (இந்தியா மற்றும் பாகிஸ்தான்) எங்களுடன் வர்த்தகம் செய்ய விரும்பினால், போரை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் சொன்னோம்” என அவர் கூறினார்.
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் காரணத்தினால் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்து அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். இதன் பிறகு இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டது.
இந்தியா மீது தொடர் விமர்சனங்களை அதிபர் டிரம்ப் முன்வைத்தார். இந்த சூழலில், நம் நாட்டின் மீது அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி, வரும் நவம்பர் மாதத்துக்குள் விலக்கிக் கொள்ளப்படலாம் என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
![]()





