புதுடெல்லி, செப்.2–
இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச்சிறிய சிப் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் மோடி கூறினார்.
டெல்லியில் உள்ள யஷோ பூமியில் இன்று முதல் 4-ம் தேதி வரை செமிகான் இந்தியா 2025 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். மாநாட்டை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி பேசியதாவது:-
நான் ஜப்பான் மற்றும் சீனாவுக்கு சென்றுவிட்டு நேற்று இரவு தான் திரும்பி வந்தேன். அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை விரைவில் தொடங்குவோம்.
டிஜிட்டல் உள்கட்டமைப்பின் அடிப்படை முக்கியமான கனிமங்கள் ஆகும். இந்தியா அரிய கனிமங்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய உறுதிபூண்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச்சிறிய சிப் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை. சிப் சிறியதாக இருக்கலாம். ஆனால் உலகின் முன்னேற்றத்துக்கு தேவையான சக்தியை அது கொண்டுள்ளது. கடந்த நூற்றாண்டை எண்ணெய் தீர்மானித்தது. அடுத்துவரும் நூற்றாண்டை சிப் தீர்மானிக்கப்போகிறது. எண்ணெய் கருப்பு தங்கம் என அழைக்கப்படுகிறது. அதே நேரம் இந்த சிப்கள் டிஜிட்டல் வைரங்கள் என அழைக்கப்படும். சீர் திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் என்ற மந்திரத்தை இந்தியா பின்பற்றி வருகிறது.
உலகமே உன்னிப்பாக கவனிக்கும்…
செமிகண்டக்டர் திட்டங்களில் 18 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. உலகம் இந்தியாவை நம்புகிறது.
கடுமையான சவால்கள் இருந்த போதிலும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது. 2023ம் ஆண்டில் இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த துறையில் இந்தியாவின் வளர்ச்சியை உலகம் உன்னிப்பாக கவனிக்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இந்த மாநாட்டில் அமெரிக்கா, நெதர்லாந்து, ஜப்பான் சிங்கப்பூர், தென்கொரியா, மலேஷியா ஆகிய 6 நாடுகளுடன் வட்டமேசை சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் 33 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். மேலும், 350 கண்காட்சியாளர்கள் இம்மாநாட்டில் அரங்குகளை வைக்கவுள்ளனர். 1,100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐ.பி.எம்., மைக்ரான், டாடா எலக்ட்ரானிக்ஸ், டோக்கியோ எலக்ட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் பங்கேற்றன.
![]()





