- விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் இனி ரூ.22,000
- தியாகிகளின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் இனி ரூ.12,000
- வீரபாண்டிய கட்டபொம்மன்; வ.உ.சி. வாரிசுகளுக்கு ஓய்வூதியம் இனி ரூ.11,000
சென்னை, ஆக. 15–
இன்று (15–ந் தேதி) 79–வது சுதந்திர தினத்தைத்யொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார். போலீசாரின் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் இனி ரூ.22,000 ஆகவும், தியாகிகளின் குடும்பங்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் இனி ரூ.12,000 ஆகவும், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி. வாரிசுகளுக்கு ஓய்வூதியம் இனி ரூ.11,000 ஆகவும் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 9 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.
79–வது சுதந்திர தினத்தைத்யொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார்.
79வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கொடி ஏற்றுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீசாரின் மோட்டார் சைக்கிள் புடைசூழ கோட்டைகொத்தளத்திற்கு வந்தார். அவரை தலைமை செயலாளர் நா. முருகானந்தம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
தென்னிந்தியப் பகுதிகளின் தலைமைப் படைத்தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் வி. ஸ்ரீரீஹரி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ரியர் அட்மிரல் சதீஷ் எம் ஷெனாய், வான்படை அதிகாரி ஏர் கமோடோர் தபன் சர்மா, சென்னை கடலோரக் காவல்படை கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பாலகிருஷ்ணன் முருகன், தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால், கூடுதல் காவல் துறை இயக்குனர் டேவிட்சன் தேவாசிர்வாதம், சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் ஆ.அருண் ஆகியோரை மரபுப்படி முதல்வருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்துவைத்தார்.
இதைத் தொடர்ந்து போலீசாரின் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார். பின்னர் திறந்த ஜீப்பில் ஏறி போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். கோட்டை கொத்தளம் அருகே சென்றதும் ஜீப்பில் இருந்து இறங்கி கொத்தளத்திற்குள் படிகள் ஏறி விழா நடைபெறும் இடத்துக்கு சென்றார்.
சரியாக 9 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். அப்போது வண்ண பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன. காவல் துறையினரின் கூட்டு குழல் இசைக்கப்பட்டது. அப்போது சுதந்திர தின விழாவை காண வந்த அனைவரும் எழுந்து நின்று தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்தினர்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:–
நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த விடுதலை நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கும் அதே வேளையில், நாம் இன்று விடுதலைக் காற்றை சுவாசிக்கக் காரணமாய் விளங்கும் தியாகிகளை போற்றி, அவர்களது உன்னத நோக்கங்கள் நிறைவேற நாளும் உழைக்க உறுதி எடுத்துக்கொள்வோம்.
‘காக்கும் கரங்கள்’ திட்டம்
19–ந் தேதி துவக்கம்
விடுதலைப் போராட்ட வீரர்களின் வழித்தோன்றல்களுக்கும் தொடர்ந்து உதவிகளைச் செய்து வருகிறோம். முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்காக ‘காக்கும் கரங்கள்’ திட்டத்தினை அறிவித்திருந்தேன். இந்தத் திட்டத்தினை வரும் 19-ஆம் நாள் துவங்கி வைக்க உள்ளேன்.
ஏழை எளிய மக்களின் தேவைகளை உணர்ந்து, அவர்கள் கேட்பதற்கு முன்னதாகவே அவற்றை நிறைவேற்றித் தரும் அரசு – உங்கள் திராவிட மாடல் அரசு! இந்த வீர விடுதலைத் திருநாளிலும் ஒன்பது முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
முதல் அறிவிப்பு
மாநில அரசு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கிவரும் மாதாந்திர ஓய்வூதியம் 22 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
இரண்டாவது அறிவிப்பு –
மாநில அரசு விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கிவரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
மூன்றாவது அறிவிப்பு –
வீரபாண்டிய கட்டபொம்மன் வழித்தோன்றல்கள், முன்னாள் ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள், சிவகங்கை மருது சகோதரர்கள் வழித்தோன்றல்கள் மற்றும் வ.உ.சிதம்பரனார் வழித்தோன்றல் பெற்றுவரும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் 11 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
நான்காவது அறிவிப்பு –
இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
ஐந்தாவது அறிவிப்பு –
இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
ஆறாவது அறிவிப்பு –
தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் வசதிக்காக சென்னை, மாதவரத்தில் 33 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் உள்கட்டமைப்புடன் கூடிய முன்னாள் படை வீரர்கள் தங்கும் விடுதி 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
ஏழாவது அறிவிப்பு –
தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
எட்டாவது அறிவிப்பு –
ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் இரண்டு பயிற்சி மையங்கள் மற்றும் மாவட்டத்திற்கு ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஆகியவை தொடங்கப்படும்.
ஒன்பதாவது அறிவிப்பு –
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில், பதிவுபெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் கல்லூரியில் படிக்கும்போது, திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு பெற, நவீன தொழில்நுட்பங்களில் பத்தாயிரம் மாணவர்களுக்கு 15 கோடி ரூபாய் செலவில் இணைய வழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
இந்த ஒன்பது அறிவிப்புகளும் விரைவில் செயல்படுத்தப்படும்.
தக்கத் தருணம்
வந்துவிட்டது…
ஒன்றிய அரசின் சட்டங்கள் மூலமாகவும், நீதிமன்றத் தீர்ப்புகளாலும், மாநில அரசுகளுக்கான நிதிப் பங்கீட்டிலும், திட்டங்களிலும் ஒன்றிய அரசு காட்டும் பாரபட்சத்தாலும், ஒன்றிய அரசைச் சார்ந்து இருக்கும் நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டு வருகின்றன.
இவற்றைக் களைந்திட ஒன்றிய – மாநில அரசுகளுக்கிடையேயான அதிகாரம் மற்றும் நிதிப் பகிர்வில் மாநில அரசுகளின் பங்கினை மீட்டெடுத்திட, அரசியல் சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதுதான் ஒரே தீர்வு! இதற்கான முன்முயற்சிகளை நிறைவேற்றி முடிப்பதற்கான தக்கத் தருணம் தற்போது வந்துவிட்டது என இந்த விடுதலை நாளில் உறுதியாக நம்புகிறேன்.
மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய, தரப்பட வேண்டிய நிதியை எப்போதும் போராடி, வாதாடி, வழக்குப் போட்டு பெற வேண்டிய நிலைமையில் இருப்பது கூட்டாட்சி இந்தியாவுக்கு அழகல்ல. இது மாநிலத்தின் வளர்ச்சியையும் பாதிக்கும், இந்தியாவின் வளர்ச்சியையும் பாதிக்கும்.
சுயசார்புடனும், தனித்துவமான அடையாளங்களுடனும் ஒவ்வொரு மாநிலமும் செழித்து வளரும்போது தான் ஒன்றுபட்ட வலிமையான இந்தியத் திருநாடு உலக அரங்கில் உயர்ந்து நிற்கும்!
தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்திக் காட்டும் கடமையும், பொறுப்பும் நமக்கு உண்டு.
தமிழ்நாட்டு மக்களுக்கு உங்களில் ஒருவனாக, இந்திய நாட்டு மக்களுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக – எனது மனமார்ந்த விடுதலை நாள் நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
இவ்விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, துணை முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள்,
நீதிபதிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், காவல் துறை தலைவர் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
![]()





