புதுடெல்லி, செப். 12– நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக இன்று தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.
துணை ஜனாதிபதி தேர்தலில் 452 வாக்குகள் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
இதனையடுத்து துணை ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு 15-வது துணை ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.
துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கர், கடந்த ஜூலை 21ம் தேதி உடல்நிலை காரணமாக தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். ஆனால், பாஜக தலைவர்களின் அழுத்தத்தின் காரணமாகதான் ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜிநாமா செய்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்தன.
மேலும், பதவியை ராஜிநாமா செய்த ஜகதீப் தன்கர், பொதுவெளியில் தோன்றாமல் மறைந்திருப்பது ஏன்? என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், பதவியை ராஜிநாமா செய்த பிறகு முதல்முறையாக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழாவில் ஜகதீப் தன்கர் இன்று நேரில் கலந்துகொண்டார். முன்னாள் துணை ஜனாதிபதிகள் வெங்கையா நாயுடு, முகமது ஹமீத் அன்சாரி ஆகியோருடன் ஜகதீப் தன்கரும் அமர்ந்திருந்தார்
துணை ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். துணை ஜனாதிபதிக்கு சம்பளம் என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் மாநிலங்களவை தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கு மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் கிடைக்கும். இது தவிர உறைவிடம், மருத்துவம், பயணம் உள்பட பல சலுகைகள் உள்ளன. ஓய்வுக்குப் பிறகு சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்கும்
![]()





