செய்திகள்

இந்தியாவின் வலிமையைக் காட்டும் சோம்நாத் கோவில் கொடி: மோடி பெருமிதம்

Makkal Kural Official

ஆமதாபாத், ஜன. 11:

சோம்நாத் கோவிலில் பறக்கும் கொடி இந்தியாவின் வலிமையைக் காட்டுகிறது என பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோவில் மீது 1026–ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் கஜனி முகமது தாக்குதல் நடத்தி, ஏராளமான செல்வங்களை கொள்ளையடித்து சென்றார். அதன் பின், முகலாய ஆட்சியாளர்களால் பலமுறை கோவில் தாக்கப்பட்டது. இந்த தாக்குதல்களுக்கு பின், ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் சோம்நாத் கோவில் கம்பீரமாக நிற்கிறது.

இதை நினைவுகூரும் வகையில் சோம்நாத் பெருமித திருவிழா நடக்கிறது. இதையொட்டி கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

இதனால் 3 நாள் பயணமாக பிரதமர் மோடி குஜராத் சென்றார். கோவிலில் நேற்றிரவு அவர் சாமி தரிசனம் செய்தார்.

உற்சாக வரவேற்பு

இன்று நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்க திறந்த வாகனத்தில் சென்ற பிரதமர் மோடியை அங்கு கூடியிருந்த மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

கோவிலில் சிறப்பு வழிபாடுகளையும் பிரதமர் மோடி மேற்கொண்டார். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், துணை முதல்வர் ஹர்ஷ் சங்வி உடன் இருந்தனர்.

வழிபாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி பேசுகையில்,

நமது முன்னோர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சோம்நாத் கோவிலுக்காக தங்களது உயிரை தியாகம் செய்தனர். இந்த சூழ்நிலையும், இந்த சந்தர்ப்பமும் தெய்வீகமானது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். நான் உங்களுடன் உரையாடும் போது எனக்கு மீண்டும், மீண்டும் ஒரு கேள்வி எழுகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தின் சூழல் எப்படி இருந்திருக்கும். ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சோம்நாத் கோவிலில் கொடியேற்றப்பட்டு இருக்கிறது.

இது இந்தியாவின் சக்தியையும், திறன்களையும் முழு உலகிற்கு எடுத்துரைக்கிறது. கோவிலை அழித்ததன் மூலம் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாகப் படையெடுத்தவர்கள் நினைத்தார்கள்.

ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் சோமநாதரின் கொடி கம்பீரமாகப் பறந்து கொண்டிருக்கிறது. இது இந்தியாவின் வலிமையைக் காட்டுகிறது. சோமநாதரின் கதை இந்தியாவின் கதை. அந்நியப் படையெடுப்பாளர்கள் இந்தியாவை பலமுறை அழிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தோல்வியடைந்தனர்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

டிரம்ஸ் வாசித்த மோடி

சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடியை வரவேற்க கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டிரம்ஸ் வாசித்து வரவேற்ற கலைஞர்களை மோடி பாராட்டினார். அவர்களுடன் இணைந்து சிறிது நேரம் டிரம்ஸ் வாசித்து மகிழ்ந்தார். இதனை கண்ட இசை கலைஞர்கள் உற்சாகம் அடைந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *