சென்னை, டிச.18:
சென்னையின் பழமையான சபைகளில் ஒன்று, இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டியாகும். அதன் 93-ம் ஆண்டு தென்னிந்திய இசைக் கருத்தரங்கம் மற்றும் விழா நேற்று தொடங்கியது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி முன்னிலையில் இந்த விழாவை தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் (ஐஐடி) பேராசிரியர் காமகோடி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது காமகோடி, லால்குடி ஜி.ஜே.ஆர்.கிருஷ்ணன் மற்றும் லால்குடி விஜயலட்சுமி ஆகியோருக்கு சங்கீத கலாசிகாமணி பட்டத்தையும் ரொக்கப் பரிசையும் வழங்கினார். நல்லி குப்புசாமி செட்டி, கதக் மற்றும் பரதநாட்டியக் கலைஞர்களான நிரூபமா, ராஜேந்திரன் ஆகியோருக்கு நாட்டிய கலாசிகாமணி பட்டத்தையும், ரொக்கப் பரிசையும் வழங்கினார். மேலும், மிருதங்க வித்வான் வைத்தியநாதனுக்கு டாக்டர் உமையாள்புரம் சிவராமன் விருதையும், ஜி.என்.பி. அறக்கட்டளையின் ஜி.என்.பி. விருதை மங்கலம் சங்கருக்கும் நல்லி குப்புசாமி செட்டி வழங்கினார்.
நாராயண குருவய்யா செட்டியின் எஸ்டேட் மற்றும் அறக்கட்டளையின் கவுரவச் செயலாளர் வி.ராஜேஷ் மற்றும் அறங்காவலர் ராஜேஷ் ஆகியோர், தாரிணி கோமலுக்கு நாடக கலாசிகாமணி விருதை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பேராசிரியர் காமகோடி, சென்னை தொழில்நுட்பக் கழகத்தில் இசையை மேம்படுத்தும் முயற்சியாக, மூங்கிலால் ஆன மைக் இல்லாத ஒரு கலையரங்கத்தை நிறுவுவதோடு, இளையராஜா இசை திறன் மையத்தை நிறுவும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
முன்னதாக, இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் துணைத்தலைவர் வெங்கட்ரங்கம் வரவேற்புரை ஆற்றினார். கவுரவச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் தலைமை உரையாற்றினார். இந்த தொடக்க விழாவில், கோமல் மற்றும் குழுவினரின் ‘மேடையில் சிறுகதைகள்’ நாடகம் நடைபெற்றது.
![]()





