செய்திகள்

இத்தாலியின் ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது வென்றார் அஜித் குமார்

Makkal Kural Official

சென்னை, நவ. 23:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.

இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது. நடிகர் அஜித் குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே 64 படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில், பிலிப் சாரியட் மோட்டார்ஸ் போர்ட் சார்பில் எஸ்ஆர்ஓ மோட்டார் ஸ்போர்ட் குழுமம், அஜித்குமாருக்கு ‘GENTLEMAN DRIVER OF THE YEAR 2025’ விருது வழங்கி கௌரவித்துள்ளது. இத்தாலியின் வெனிஸ் நகரில் நடந்த விருது விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற அஜித்குமார் விருதினை பெற்றுக்கொண்டார்.

இந்த விருது குறித்து அஜித்தின் மனைவி ஷாலினி தனது இன்ஸ்டா பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் கூறியுள்ளதாவது:

தொழில்முனைவோர், கார் ரேஸராக இருந்த பிலிப்பே சாரியோல் சார்பாக வெனிஸில் வழங்கப்படும் இந்தாண்டுக்கான ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது வென்ற எனது கணவரின் பக்கத்தில் நிற்க பெருமைப்படுகிறேன் என்றார்..சமீபத்தில் இந்தியாவின் பத்மபூஷன் விருதை அஜித் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவில் நடைபெற்ற கார் பந்தயத்திலும் அஜித்தின் அணி சாதனை படைத்தது. இப்படி தொடர்ச்சியாக விருதுகளை வாங்கிக் குவிக்கும் அஜித்தால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் என்று கூறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *