ஆர் முத்துக்குமார்
இந்த நாள் தமிழ்ச் சினிமாவின் தனித்துவமான உயர்ந்த மனிதர் ரஜினிகாந்த் பிறந்த நாள். சினிமா உலகத்தில் ஒரு நட்சத்திரம் என மட்டுமல்லாமல், எந்தக் கதாபாத்திரத்தை ஏற்றாலும் அதில் தனக்கென ஒரு ஸ்டைலை ஏற்றி, அதை மறக்க முடியாத அனுபவமாக மாற்றி விடும் சாமர்த்தியசாலி ஆவார்.
அவரது வாழ்க்கையும் பயணமும் ஒரு முக்கியமான உண்மையைச் சொல்கிறது “வெற்றி பெற வேண்டுமெனில், இருக்கும் பாதை அல்ல… நீ செதுக்கும் பாதையே உன்னை சிகரத்தில் நிறுத்தும்.”
ரஜினிகாந்தின் நடிப்பு வெறும் “பாத்திரப்படைப்பு” அல்ல.
அது அவரது தனிப்பட்ட கவர்ச்சி! சினிமாவில் ஸ்டைல் என்று சொல்லும்போது முதலில் நினைவிற்கு வருவது ரஜினி. அது அவருக்கு மட்டுமே உரியது. சிகரெட் சுழற்றும் பாங்கு, கண்ணாடி அணியும் விதம்… இவை அனைத்தும் தமிழ்ச் சினிமா கலைச்சொல்லாகவே மாறின.
நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி” போன்ற வசனங்கள், வெறும் உரையாடல்கள் அல்ல; அவை ஸ்டைல் மற்றும் வீரியம் நிரம்பிய சினிமா தருணங்கள்.
பஸ் கண்டக்டராகத் தொடங்கிய வாழ்க்கை, பின்னர் தமிழ்ச் சினிமாவின் முடிசூடா மன்னராக உயர்ந்த அதிசயம்— இது வெறும் கதை அல்ல; இது கோடி கணக்கான மனிதர்களுக்கு ஒரு உந்துசக்தி.
ரஜினியின் மாயம் என்ன?
அவர் நடிப்பை எளிதாக்கினார். எளிதாக்கிய நடிப்பில் உணர்ச்சியைக் கலந்து, அதை நாடகத்தனமாக மின்சாரம் போல் பாயச்செய்தார். நடிப்பில் ஒருபுறம் ஸ்டைல் இருந்தால், மறுபுறம் மக்கள் மனத்தைத் தொடும் ஆழமான உணர்வும் இருந்தது.
திரைத்துறையில் அவரின் முதல் சந்தர்ப்பம் எளிதானது—ஒரு சிறிய காட்சி, சில வார்த்தைகள். ஆனால் அடுத்து வந்த வாய்ப்பு, அச்சம் தரும் விவகாரம்! அது மூன்று மகா நட்சத்திரங்கள் முன்னிலையில், அதாவது கமல்ஹாசன், ஸ்ரீதேவி, கல்கத்தா விஸ்வநாதன்.
அதில் ரஜினியால் சரியாக வசனம் பேச முடியவில்லை. அவரைச் சாடினர். நையாண்டி செய்தனர், மொத்ததில் ஒரு பெரிய மைனஸ்.
சினிமா சூரியன்:
இந்த நிலை பலரின் கனவையே முறியடித்திருக்கும். ஆனால் ரஜினி துணிந்து அதுகுறித்து ஆழமாக யோசித்தார்.
“எனக்கு வசனம் நினைவில் வர நேரம் ஆகிறது. ஆனால் காட்சியில் இருந்து வெளியில் போக முடியாது. எப்படி அக்காட்சிக்கு உயிர்ப்பு தருவது?” அவர் ஒரு புத்திசாலித்தனமான வழியைத் தேர்ந்தெடுத்தார்—
உரையை நினைவில் கொள்ளும் வரை, காட்சிக்குள் ஏதாவது செயல் செய்து கொண்டு இருக்க வேண்டும். ஒரு அசைவு, ஒரு கை பணி, ஒரு நடத்தை… இதுதான் பின்னர் “ஸ்டைல்” என்ற புகழை உருவாக்கியது. இயக்குநர்களும், ரசிகர்களும் அதை ரசித்தனர்.
அவரின் குறைபாட்டே, அவரின் அடையாளமாகவும் அவரின் வெற்றியாகவும் மாறியது. இந்த அணுகுமுறையை பின்னர் நடிகர் ரகுவரன் உட்பட பலர் கூட பின்பற்றினார்.
ரஜினிகாந்தின் பயணம் ஒரு விஷயத்தை சொல்கிறது:
தோல்வி என்பது முடிவு அல்ல. அது தன் பாணியை உருவாக்கும் தொடக்கம். தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னராக உயர்ந்த ரஜினிகாந்த், தான் ஏற்றுக்கொண்ட அனைத்து வேடங்களிலும் ஒரு பிராண்டாகவே திகழ்ந்தார்.
இந்த டிசம்பர் 12-ஆம் தேதி, ரஜினிகாந்தின் பிறந்த நாளை அவருடைய கோடி கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து மனமார வாழ்த்துவோம்.
இன்று ஒரு உச்சபட்ட நடிகரின் பிறந்த நாள் மட்டும் அல்ல— தனித்துவம், துணிவு, படைப்பாற்றல், மற்றும் “நான் வேறு மாதிரி” என்ற தத்துவத்தின் கொண்டாட்டம், அவரது தனித்துவமான மகத்துவத்தின் கொண்டாட்டம்.
ரஜினிகாந்த்: மைனஸை ஸ்டைலாக மாற்றி உலகையே கவர்ந்த சினிமா சூரியன்.
![]()




