சென்னை, நவ.15-
இணையதளம், சமூக ஊடகங்களை அளவோடு பயன்படுத்த வேண்டும் என மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் அரசு விழா மற்றும் குழந்தைகள் தின விழா நடந்தது. விழாவுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குழந்தைகள் தின வாழ்த்துச் செய்தியை வாசித்தார்.
அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
பாவேந்தர் பாரதிதாசனார் அறிவுறுத்தியபடி, இனிமையான உங்கள் குழந்தைப் பருவத்தை நீங்கள் கல்வியில் செலவிட வேண்டும். அனைத்துக் குழந்தைகளும் தரமான கல்விபெறவேண்டும் என்பதுதான் நமது அரசின் எண்ணம். எவராலும் அழிக்க முடியாத நிரந்தரச்சொத்து கல்வி மட்டுமே. நமது அய்யன் திருவள்ளுவரும் அழிக்கமுடியாத சிறந்த செல்வம் கல்வி என்கிறார்.
கற்பதில் இருந்து ஒரு குழந்தைகூட விடுபட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ள நமது திராவிட மாடல் அரசு, குழந்தைகளுக்காகப் பல்வேறு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்திவருகிறது. மிகப்பெரிய சவால்களையும் குழந்தைகள் சந்திக்க ஏதுவாக நமது கல்வியில் பல்வேறு மேம்பாடுகளைச் செய்து வருகிறோம். குறிப்பாக, கல்வியில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம்.
நம் குழந்தைகளின் கல்வி எக்காரணம் கொண்டும் தடைபடக் கூடாது என்பதற்காக, அரசு அதிக நிதியினை ஒதுக்கி உட்கட்டமைப்பு வசதிகளைப் படிப்படியாக மேம்படுத்தி வருகிறது. மலைப்பாங்கான பள்ளிகளில் உள்ள குழந்தைகள், பள்ளி செல்வதற்காக வாகன வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி மட்டுமல்ல, உயர்கல்வியும் தடையில்லாமல் கிடைக்க அனைத்து முன்னெடுப்புகளையும் நமது திராவிட மாடல் அரசு வழங்கி வருகிறது. அன்புக் குழந்தைகளே, உங்களின் கவனம் முழுவதும் படிப்பது மட்டுமின்றி, உடல், மன நலனைப் பராமரிப்பதிலும் இருக்க வேண்டும். இன்றைய உலகில் வேண்டாத பல்வேறு பழக்கங்களும் உங்களைச் சுற்றிலும் திசைதிருப்பக் காத்துக் கிடக்கின்றன.
அதிக நேரத்தை இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் செலவிடுவது உங்களின் பகுத்தறியும் சிந்தனையைச் சிதைத்து, மூளையை மழுங்கடித்து, ஏதொன்றிலும் ஆழங்காற்படாமல் தடுக்கிறது.
எனவே, எதையும் அளவோடு, அறிவோடு, முறையாகப் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளின் உடல்நலனை வலுவானதாக்க உடற்கல்வி உதவும். உள்ளரங்க மற்றும் வெளி விளையாட்டுகள் புத்துணர்ச்சியும், உற்சாகமும் தரும்.
ஒரு தாயின் கரிசனத்தோடு, தந்தையின் அக்கறையோடு தமிழ்நாட்டுக் குழந்தைகள் ஒவ்வொருவரின் ஒட்டுமொத்த வளர்ச்சியினை உறுதி செய்வதற்கு நானும், திராவிட மாடல் அரசும் என்றும் துணைநிற்போம். நாளைய தமிழ்நாடு வலிமையான தமிழ்நாடாகத் திகழ உழைப்போம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
![]()





