சென்னை, ஜன. 3:
இடைநிலை ஆசிரியர்களை கைவிடமாட்டோம், அவர்கள் பொறுமையாக இருந்தால் நல்ல முடிவு எடுப்போம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.
சென்னை நந்தனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கலந்து கொண்டார்.
அப்போது அவரிடம் நிருபர்கள் ஆசிரியர்கள் போராட்டம் குறித்த கேள்விகளை சரமாரி கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-
போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களிடம் நானும், அதிகாரிகளும் கடந்த 7 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நேற்று திருச்சியில் இருந்து விமானத்தில் வரும்போது கூட முதல்வர் இதுபற்றி கேட்டார். ஓய்வூதியம் சார்ந்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அது முடிந்தவுடன் இடைநிலை ஆசிரியர்கள் சார்ந்த விவாதங்களை நிதித்துறை எங்களிடம் கேட்டுள்ளது. அதனை நாங்கள் தெளிவுபடுத்த இருக்கிறோம். நாங்கள் வாக்குறுதியில் சொன்னதைத்தான் கேட்கிறார்கள். அவர்கள் புதிதாக எதையும் சொல்லவில்லை. இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு சம்பள கமிஷன்போது ஏற்பட்டது. பொதுவாக ஊதியக் குழுவில் உயர்வு இருக்கும். பணி நியமனம் தொடர்பாக, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவுடன் சொன்ன சம்பளம் ஒன்றாகவும், நியமனத்துக்கு பிறகு பெறும் சம்பளம் ஒன்றாகவும் இருக்கும். அந்த வித்தியாசத்தை சரி செய்ய சொல்லி கேட்கிறார்கள். அதை நிறைவேற்றி தருகிறோம் என்று சொல்லியுள்ளோம்.
நிதித்துறை அமைச்சர், செயலாளரிடம் பேசி நல்ல முடிவை எடுப்போம்.ஆசிரியர் போராட்டம் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. கட்டாயம் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவோம். இதில் எத்தனை பேர் பாதிக்கப்பட்ட இருக்கிறார்கள் என்ற விவரங்களை சேகரித்து வருகிறோம்.அவர்களின் உணர்வுகளை அந்த துறையின் அமைச்சர் என்ற அடிப்படையில் புரிந்து கொள்கிறேன். நல்ல முடிவை ஏற்படுத்தும் என்பது தான் ஆசை. கண்டிப்பாக பொறுமையாக இருந்தால் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.ஆசிரியர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். அவர்கள் ஒரு கட்டத்தில் நிற்கிறார்கள். நாங்கள் ஒரு கட்டத்தில் இருக்கிறோம்.ஆசிரியர்களின் போராட்டம் உணர்வின் வெளிப்பாடு. அதனை ஆர்ப்பாட்டமாக, போராட்டமாக நாங்கள் பார்க்கவில்லை. படித்தவர்கள், எந்த எல்லை வரை போராட வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும், நாட்டு மக்களுக்கு முன் உதாரணமாக அவர்களை பார்க்கிறேன். எது எப்படி இருந்தாலும் அவர்கள் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள். கண்டிப்பாக ஆசிரியர்களை கைவிட மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
![]()





