வாசலின் வெளியே ஆடம்பரமான அலங்காரத்தில் பந்தல், வாழைமரம், சீரியல் பல்புகள் என்று அமர்க்களமாகப் போடப்பட்டிருந்தது. ஒரு மாதத்திற்கான இசை விழாவின் பெயர் பட்டியலை ஒட்டியிருந்தார்கள் அத்தனையும் வாயில் நுழையாத ராகங்களின் பெயர்களை எழுதி வைத்திருந்தார்கள். பாடும் ஆள், பாடுகிறவர்களின் பெயர்கள் என்று அரங்கத்தின் முன்னால் இருந்ததைப் படித்துப் பார்த்து
” எந்த நிகழ்ச்சி நன்றாக இருக்கும் ?” என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள் அன்று விழாவிற்கு வந்தவர்கள் .
அன்று, ஐந்தாவது நாள். கர்நாடக சங்கீதத்தில் கரை கண்ட ஒரு பாடகரும் பாடகியும் பாடுவதற்குத் தயாராக இருந்தார்கள். விரிந்து பரந்த அரங்கத்தின் உள்ளே ஆயிரம் பேர் அமரலாம் என்று இருக்கைகள் எல்லாம் மக்களை வரவேற்றுக் காத்துக் கிடந்தன. ஒன்று, இரண்டு என்று வரத் தொடங்கிய மக்கள் நேரம் ஆக ஆக அரங்கம் நிறைய ஆரம்பித்தார்கள். பக்க வாத்தியம், நாதஸ்வரம், வயலின், கடம் என்று இடது புறம் அமர்ந்திருந்தார்கள். மேடையில் நடுநாயகமாக அமர வைக்கப்பட்டிருந்தார்கள், பாடகர்கள் . முதலில் கடவுள் வாழ்த்தென்று ஆரம்பித்தது, பாடல் பற்றித் தெரிந்தவர்களுக்கும் அறிந்தவர்களுக்கும் அந்தப் பாடல் இனிமையாக இருந்தது. அறியாதவர்களுக்கு அந்தப் பாடல் கொடுமையாக இருந்தது.
இசை விழா என்றால், நமக்குத் தெரிந்த வார்த்தைகளைப் போட்டு பாடல் பாடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த வரதராஜனுக்கு அந்தக் கர்நாடக சங்கீத விழா கசப்பாக இருந்தது.
” என்ன இது, என்னென்னமாே பாடுறாங்க. ஒன்னும் புரிய மாட்டேங்குது. வெளிய போயிரலாமா?”
என்று உடன் வந்திருந்த மாேகனிடம் கேட்டார், வரதராஜன்.
” உடனே எழுந்து போனா நல்லா இருக்காது. கொஞ்ச நேரம் கழிச்சுப் போகலாமா ?
என்று மோகன் சொல்ல, பல்லைக் கடித்துக் கொண்டு உள்ளே உட்கார்ந்திருந்தான், வரதராஜன். அரங்கில் அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்தான். அமர்ந்திருந்த ஆட்கள் எல்லாம் பாடகரின் பாடலை ஆமோதித்து கைதட்டியும் தலையாட்டியும் ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
” இவங்க பாடுறது நமக்கு ஒன்னும் புரியலயே? இவங்களுக்கு மட்டும் எப்படிப் புரியுது ? “
என்று வரதராஜன் மோகனிடம் கேட்க
“நமக்கு இந்தப் பாடலோட இலக்கணம் தெரியல. அதத் தெரிஞ்சவங்க ரசிக்கிறாங்க. அவ்வளவுதான் “
என்று இருவரும் பாடலை விட்டு விட்டு ரசிப்பவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். வாழ்த்துப் பாடலில் ஆரம்பித்தவர்கள், மத்திய ஸ்தாயின் நடுவில் வந்து நின்றார்கள். பாதி முடிந்த இசை விழா இன்னும் மீதி முடிவதற்குப் பாதி நேரம் இருந்தது.
“சரி நமக்கு இது ஒத்து வராது. நான் தூங்குறேன்”
என்று முன்னிருக்கைக்கு முன்னால் தனது கால்களை அகலப் பரப்பித் தூங்க ஆரம்பித்தான், வரதராஜன். சிறிது நேரம் கேட்டுக்கொண்டிருந்த மோகனும் தூங்க ஆரம்பித்தான். களை கட்டிக் கொண்டிருந்தது கர்நாடக இசைக் கச்சேரி.
மேடையின் இரு பக்கமும் இருந்த பக்கவாத்தியங்கள் முழங்க அத்தர் பூசிய பாடகர், பாடகி அடிக்கடித் தண்ணீரை குடித்துக் கொண்டும் தன் தொடையில் தாளம் போட்டுக் கொண்டும்… பலே … பலே … “
என்று பாடிக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் பாடுவதை சிலர் ரசித்தார்கள். சிலர் தூங்கிக் கொண்டிருந்தார்கள். தாய்த் தமிழ் நாட்டில் மொழி மாறிய பாடல்கள் மட்டும் அரங்கத்தை நிறைத்துக் கொண்டிருந்தது .
“எட்டு மணிக்கு மேல ஆச்சுன்னா நாம இங்க உட்கார முடியாது .சுகர் மாத்திரை போடணும் . அப்புறம் சாப்பிடணும் ” கிளம்பிடலாம்’ என்று வயதான தம்பதிகள் பேசிக்கொண்டார்கள்.
” நாம இப்பவே கிளம்பினா தான் வீட்டுக்குப் போக முடியும் . இல்ல லேட்டாயிரும் “
என்று சிலர் பேசிக் கொண்டார்கள்.
பாடுவது சரியாக இருக்கிறதோ இல்லையோ மொத்தமாக அவர்களுக்குக் கைதட்டி ஆரவாரம் செய்வதும் அவர்களுக்கு உற்சாகப்படுத்துவதுமாக இருந்தது, அந்தக் ஒரு கூட்டம்.
” காக்கா கூட்டம் மாதிரி போல இந்தக் கூட்டம் என்ன பண்ணுனாலும் கை தட்டி ஆரவாரம் பண்ணித் தூக்கி விடுறானுக. இவங்கள மாதிரி ஒரு கூட்டம் இந்த ஒலகத்திலயே இல்ல. தான் முன்னேற என்ன வேணுன்னாலும் செய்வானுங்க “
என்று தூங்கிக் கொண்டே சொன்னான், வரதராஜன். அதை ஆமோதித்தான் , மோகன்.
தாங்கள் கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் பைகளை சிலர் திறந்ததும் சல சல சலவென்று சத்தம் கேட்டது.அதிலிருந்து
தின்பண்டங்களை எடுத்து கொரித்துக் கொண்டே இருந்தனர் சில தம்பதிகள். அந்தச் சலசலப்பு சத்தம் மேடையில் இருந்த சங்கீத சத்தத்தை விட மேலோங்கி நின்றது. காெரித்துக் கொண்டும் சங்கீதத்தை ரசித்துக் கொண்டும் இருந்தனர் மக்கள்.
வெளியே ஒட்டியிருந்த ஒரு மாதத்திற்கான இசை விழா பட்டியலை வாசித்த ஒருவர்
“சூப்பர் … சூப்பர்.. இவர் ரொம்ப நல்லா பாடுவார். இவர் பாடுனா ரொம்பவே நல்லா இருக்கும். ஆஹா அற்புதம் ….இந்த மாசம் இசை விழாவில இருக்கிற எல்லாரும் சூப்பரா பாடுவாங்க”
என்று வெளியே ஒட்டியிருந்த பெயர் பட்டியலைப் பார்த்து புளகாங்கிதம் அடைந்தார்கள் சிலர். இசை விழாவின் நடுவே வாழ்த்துரை வழங்குவதற்காக சில பேர் வந்திருந்தார்கள்.
ஒரு பெண் மேடையின் மேலே ஏறி, வாழ்த்த வந்திருக்கும் பெரியோர்களை மேடைக்கு அழைத்தாள். அவசர அவசரமாக போடப்பட்டன, நாற்காலிகள். தமிழும் ஆங்கிலமும் கலந்த மொழியில் பேசிய அந்தப் பெண் மேலே ஏறிய சிறப்பு விருந்தினர்களை பேச அழைத்தாள்.
” இங்க பாடுன பாடல்களைக் கேட்டேன். என்ன மாதிரி அச்சரச் சுத்தமா பாடுறாங்க.அவங்களுக்கு நாக்கு இல்ல. இசைத்தட்டையே கடவுள் வாய்க்குள்ள வச்சிருக்கான் போல .வாயைத் திறந்தாலே வாத்திய சத்தம் தான் கேக்குது ” என்று ஒருவர் பேசினார்
” இந்த மாதிரியான இசைகளை எங்கேயும் கேட்க முடியாது . இத நீங்க தொடர்ந்து பண்ணனும். இந்த மாதிரிப் பாடுறதுக்கு அவளோட குரு தான் காரணம். இந்த மாதிரிப் பொண்ணுக்கு எப்படி எல்லாம் பாட்டு சொல்லிக் கொடுத்திருக்கா. அவளோட குரு பேசும் சரஸ்வதி ” என்று ஒருவர் புகழ்ந்துரைத்தார்.
” என்ன மாதிரி பாடுறா. இவ நாக்குல சங்கீத சரஸ்வதி ஒக்காந்து இருக்கா. கண்டிப்பா இன்னும் கொஞ்ச நாள்ல உலகம் போற்றும் அளவுக்கு இவ உயர்ந்திருவா “
” எனக்கெல்லாம் கர்நாடக சங்கீதம் பத்தி எதுவும் தெரியாது .ஆனா எல்லா மேடையிலும் என்னைய கூப்பிடுறாங்க”
என்று தன் சுயதம்பட்டத்தையும் சேர்த்து மேடையில் முழங்கினார், ஒரு சிறப்பு விருந்தினர். சிறப்புரை முடிந்த பின் மறுபடியும் அதே சுதியில் ஆரம்பமானது, இசைவிழா.
தான் சிறப்பாகப் பேசியதாக ,இரு தோள்களையும் மேலே தூக்கிக் கொண்ட ஒரு சிறப்பு விருந்தினர் நான் பேசினது எப்படி இருந்தது? என்று அடிக்கடி அருகில் இருந்தவரிடம் கேட்டுக் கொண்டார்.
” ரொம்ப நல்லா பேசுனீங்க” என்று அவர் சொன்னதும், அவரை விடாமல் மறுபடியும்
“நான் எப்படி பேசினேன் ? “
என்று அவரிடமே கேட்க
” ரொம்ப நல்லா பேசினீங்க “
என்று சொல்லியவர், அடுத்தும் நம்மிடம் கேட்பார் போல என்று அந்த இடத்தை விட்டு வேறு இடத்தில் போய் அமர்ந்தார்.
ஒரு வழியாக இசை விழா முடிந்தது. இசை விழாவில் வயலின், மிருதங்கம் , கடம் வாசிப்பவர்களைப் பற்றியும் பாடியவர்களைப் பற்றியும் புகழ்ந்து பேசிக் கொண்டே வெளியில் வந்தார்கள், பார்வையாளர்கள்.
அந்த இசை வெளியீட்டு விழா நடக்கும் இடத்திற்கு அருகே அழுக்குப் படிந்த, கிழிந்த உடை உடுத்திய ஒரு ஏழைத்தாய் தரையில் அமர்ந்து தன் குழந்தையை மடியில் கிடத்தி, அலுமினிய தட்டை கீழே வைத்து தன் இரு கைகளிலும் இரண்டு குச்சிகளைக் கொண்டு, அதில் இசையை வாசித்துக் கொண்டும் பாடிக் கொண்டும் இருந்தாள்.அவளின் பாடலையோ அவளின் அட்சர சுத்தமான சங்கீதத்தையாே கேட்க யாருமில்லை. அவள் பாடும் பாடலைக் கேட்டு அவளை அங்கீகரிக்க வேண்டும் என்ற உணர்வு அரங்கத்தில் சங்கீதத்தை ரசித்து வெளியே வந்த ஒரு ஆட்களுக்கும் இல்லவே இல்லை.
எதுவும் படிக்காத அந்த ஏழைத்தாய் எந்த அங்கீகாரத்திற்கும் ஆசைப்படாமல் தன் தட்டில் ஏதாவது காசு விழுகிறதா? “
என்ற ஏக்கத்தில் மட்டுமே பாடல்களைப் பாடிக்கொண்டே இருந்தாள். குளிரூட்டப்பட்ட அரங்க மேடையில் பாடிய பாடகர்களை விட அந்த ஏழைத் தாயின் குரல் அவ்வளவு அழகாக இருந்தது.
அவள் கீழே அமர்ந்து பாடிக் கொண்டிருக்கும் இடத்திற்கு மேலே உள்ள கட்டிடத்தில், தன் மடியில் வீணையை வைத்திருந்த சரஸ்வதியின் சிலை இருந்தது. அந்த ஏழைத் தாய் பாடிக் கொண்டிருப்பதை ரசித்துக் கேட்டுக் கொண்டே இருந்தாள் சரஸ்வதி.
![]()





