செய்திகள்

‘‘இசை என்பது வெறும் கலை வடிவம் மட்டுமல்ல, ஆன்மாவை உயர்த்தும் ஓர் புனிதப் பாதை’’: டி.எஸ். திருமூர்த்தி

Makkal Kural Official

சென்னை, நவ. 20:

‘‘இசை என்பது வெறும் கலை வடிவம் மட்டுமல்ல, இசை மூலம் ஆன்மாவை உயர்த்தும் ஒரு புனிதமான பாதை’’ என்று 15வது ஆண்டு டிரினிட்டி மிரர் இசைக் கலைவிழா – 2025ஐத் துவக்கி வைத்த ஐ.நாவின் இந்தியாவுக்கான முன்னாள் பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி பெருமிதத்தோடு கூறினார்.

அவர் உரையாற்றும் போது, ​​இந்தியாவின் பாரம்பரிய கலைகளின் செழுமை மற்றும் அதன் பரிணாம வளர்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டார்.

வருடாந்திர இசை மற்றும் நடன விழாவை 15 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வரும் டிரினிட்டி கலை விழாவின் தலைவர் ஆர். முத்துக்குமார், அமெரிக்க வாழ் தமிழர், ஒருங்கிணைப்பாளர் முரளி ராகவன் இருவரையும் மனம் திறந்து பாராட்டினார்.

இந்தியாவின் ஆழமான கலை பாரம்பரியத்தைப் பற்றிப் பேசிய திருமூர்த்தி, கர்நாடக இசை மற்றும் பரத நாட்டியம் உள்ளிட்ட கலைகள் பாரம்பரியமிக்க குருமார்களால் வளர்ந்துள்ளது என்றார்.

பரத மகரிஷி ஏழு இசை குறிப்புகளையும் (சப்த ஸ்வரங்கள்) அவற்றின் ஆன்மீக அடையாளங்களையும் நினைவு கூர்ந்தார். ஸ்ரீ தியாகராஜரின் இசையின் அருமையையும், அவரது படைப்புகளையும் பாராட்டினார்.

இந்த ஆண்டு பல இளைஞர்கள் கௌரவங்களைப் பெற்ற நிலையில், குழந்தைகளிடம் இரக்கம், தைரியம், அறிவுத்திறன் மற்றும் படைப்பாற்றலை வளர்க்க வாழ்க்கையில் இசையை மையமாகக் கொண்ட மகாகவி பாரதியாரின் ‘காலை எழுந்ததும் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு’ வரிகளை திருமூர்த்தி நினைவு கூர்ந்தார். “இந்த குணங்கள் அனைத்தும் இசையின் மூலம்தான் கிடைக்கின்றன” என்றும் அவர் கூறினார், குணத்தை வடிவமைப்பதில் கலைகளின் பங்கை வலியுறுத்தினார்.

கலையில் புதுமை

அவசியமானது…

பாரம்பரிய கலைகளின் வளர்ந்து வரும் நிலைப் பற்றிப் பேசியவர், கலையில் இன்றைய தேதியில் புதுமை இன்றியமையாததாகிவிட்டாலும், சில சவால்கள் எழுந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியபோதும் அரங்கிற்கு நேரில் வந்து லயித்து ரசிக்கும் பார்வையாளர்கள் சுருங்கி விட்டனர் என்று அனுபவம் பேசினார்.

பாரம்பரியமிக்க குருமார்களான சங்கர் கந்தசாமி, டத்தோ ராம்லி இப்ராஹிம் மற்றும் ஷங்கிதா நமசிவாயம் போன்றவர்களின் பங்களிப்புகளைக் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

நவீன விஞ்ஞான வளர்ச்சி உலகில் தொழில்நுட்பம் மற்றும் ஏ.ஐயால் (செயற்கை நுண்ணறிவு) அதிகரித்து வரும் மாற்றம், அதன் பங்கை திருமூர்த்தி எடுத்துரைத்தார்.

“தொழில்நுட்பம் கருப்பொருள்களையும் பார்வையாளர்களின் அனுபவத்தையும் மேம்படுத்துகிறது. கலையை நாம் மேம்படுத்த வேண்டும், அதை நீர்த்துப்போகச் செய்யக் கூடாது’’ என்று அறிவுறுத்தினார்.

விருது பெற்றவர்களை வாழ்த்தினார். ‘‘நல்லதற்காகவே – ஒவ்வொரு மாற்றமும்’’ என்றாலும் “நமது கலாச்சாரத்தைப் பாதுகாத்து புதுமைகளைத் தழுவுவோம்” என்றும் அழைப்பு விடுத்தார்.

இளைஞர்களை ஊக்குவிக்கும்

‘டிரினிட்டி மிரர்’: என்.ரவி

ஆண்டுதோறும் மூத்தக் கலைஞர்களை மேடையில் கவுரவிக்கும் அதே நேரம், அதே மேடையில் வளர்ந்து வரும் இளம் கலைஞர்களையும் கவுரவித்து, வாய்ப்பளித்து வரும் மக்கள் குரல் – டிரினிட்டி மிரர் ஆசிரியர், முரளி ராகவன் இருவரையும் ‘இந்து’ முன்னாள் தலைமை ஆசிரியர் என்.ரவி மனம் திறந்து பாராட்டினார்.

கலை குடும்பத்திற்கு சொந்தக்காரர் – கலை ஆர்வலர் – டி.எஸ். திருமூர்த்தி – விழாவைத் துவக்கி வைப்பதற்கு பொருத்தமானவர். கலைஞர்களை கவுரவிப்பதால் கலைகளும் வளர்கிறது, ரசிகர்களும் பெருகுகிறார்கள். சென்னையில் வளர்ந்து டெல்லி – கோலாலம்பூர் – நியூயார்க், பாலஸ்தீனம் இப்படி பல நாடுகளில் வெளிநாட்டு பணியில் உயர் பொறுப்பில் இருந்தாலும் கலைக்கும் – கலைஞர்களுக்கும் திருமூர்த்தி காட்டும் மரியாதையும், அவர்களைப் புகழ்ந்துரைப்பதும் மறக்க முடியாது என்று பாராட்டினார்.

விழி ஓரம் ஆனந்தக் கண்ணீர்

60 ஆண்டுகள் கலைத்துறை – நாட்டியத்துறையில் அரும்பணியாற்றி இருக்கும் சாதனையாளர் பிரகா பெஸ்பெசலுக்கு பாட்டிதழ் வாசித்தளித்து விருது கொடுத்தபோது அவர் விழி ஓரம் ஆனந்தக் கண்ணீர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *