செய்திகள்

இசைஞானி இளையராஜாவுக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும்

Makkal Kural Official

சென்னை, செப்.14-

அரை நூற்றாண்டு காலம் பலரது இதயத்தை ஆண்ட இசை​ஞானி இளைய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்தார்.

1976-ம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்து உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், 8,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

இளையராஜா, லண்டனில் தனது கனவு படைப்பான ‘வேலியண்ட்’ சிம்பொனியை கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி அரங்கேற்றி உலக சாதனை படைத்தார். இதற்காக இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதை நிறைவேற்றும் வகையிலும், இசை பயணத்தில் 50 ஆண்டு பொன்விழாவையொட்டியும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை இளையராஜா வுக்கு தமிழக அரசின் சார்பில் பாராட்டு விழா நடந்தது.

விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்று பேசினார்.

விழாவுக்கு தலைமை தாங்கிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளையராஜாவுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார்.

சிகரம் தொட்ட தமிழர்

விழாவில் அவர் பேசியதாவது:-

இளையராஜா கலை தாய்க்கு மட்டுமல்ல தமிழ் தாய்க்கும் சொந்தம். பாராட்டும் புகழும் அவருக்கு புதிது கிடையாது. அவரை பாராட்டுவதில் நமக்கு தான் பெருமை. அவரது இசை நமது இதயங்களை ஆளத் தொடங்கி அரை நூற்றாண்டுகள் ஆகிவிட்டது.

சினிமாவில் சாதித்தது மட்டுமின்றி லண்டனில் சிம்பொனி வாசித்து சிகரம் தொட்ட தமிழர் அவர். திறமையும் கடின உழைப்பும் இருந்தால் உயர்வை எட்டலாம் என்பதற்கு அவர் எடுத்துக்காட்டு. அவரது பாடல்களை முணுமுணுக்காத உதடுகளே கிடையாது.

இசைத்தாயின் தாலாட்டுடன் கூடிய அவரது பாடல்கள் காதல் உணர்வை போற்றுவதிலும், வெற்றியை ஊக்குவிப்பதிலும், வலிகளுக்கு நிவாரணம் தருவதிலும் இணையற்றவை. ஒரு ராஜாவுக்கு நாடும் மக்களும் எல்லையும் இருக்கும்.

ஆனால் இந்த ராஜாவுக்கு எந்த மொழிகளும் நாடும் எல்லை கிடையாது. எல்லா மக்களுக்கும் அவர் பொதுவானவர். அவரது இசையே அவரது ஆற்றலையும் உயரத்தையும் எடுத்து சொல்லும்.

சங்க தமிழக்கு ஆல்பம்

இளையராஜாவின் இசையில் நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு போன்றவை வெளிவந்திருந்தால் எங்களுக்கு மனப்பாடம் ஆகி இருக்கும்.

எனவே சங்க தமிழுக்கு, சங்க தமிழ் இலக்கியங்களுக்கு நீங்கள் இசை வடிவம் தந்து அதை ஆல்பங்களாக வெளியிட வேண்டும். எல்லோரும் முதலமைச்சரிடம் கோரிக்கைகளை தெரிவித்து முறையிடுவார்கள்.

ஆனால் இந்த இடத்தில் தமிழர்கள், தமிழ்நாடு சார்பில் நான் இளையராஜாவிடம் கோரிக்கை விடுக்கிறேன். ராஜா கைய வச்சா அது ராங்கா போகாது. எத்தனையோ விருதுகளையும் பட்டங்களையும் அவர் பெற்றிருந்தாலும் காலத்தால் அழியாத இசைஞானி என்ற பட்டத்தை அவருக்கு சூட்டி மகிழ்ந்தவர் கருணாநிதி.

இளையராஜாவுக்கும், கருணாநிதிக்கும் உள்ள நட்பு அளப்பரியது. கருணாநிதி மீது கொண்ட அன்பு காரணமாக தனது பிறந்த நாளை மாற்றிக் கொண்டார். இதன்மூலம் உள்ளத்தாலும் ராஜா என்பதை நிரூபித்து காட்டினார்.

இருவரது நட்பையும் என்னால் மறக்கவே முடியாது. என் மகள் செந்தாமரையின் நாட்டிய அரங்கேற்றத்தின் போது நேரில் வந்து பாராட்டினார். அந்த நட்பின் அடையாளமாக அவர் சிம்பொனி இசைக்கச் செல்லும்போது நான் நேரில் சென்று பாராட்டினேன்.

இது இளையராஜாவுக்கு வெறும் பாராட்டு விழா மட்டுமல்ல அவருக்கு நாம் அனைவரும் சேர்ந்து நன்றி தெரிவிக்கும் விழாவாகும்.

இளையராஜா பெயரில் விருது

இசை துறையில் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் வழங்கப்படும்.

இளையராஜாவுக்கு எந்த மகுடமும் சாதாரணமானது தான். ஆனாலும் இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை அவருக்கு வழங்க வேண்டும் என்பதை ஆவலாக விருப்பமாக கோரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக ரசிகர்கள் சார்பில் விடுக்கப்படும் இந்த கோரிக்கை நிறைவேறும் என நம்புகிறேன். ‘ஏன் இந்த ஆனந்தமே, இன்பத்தில் ஆடுது என் மனமே…’ என்ற அவரது பாடல் வரிகளுடன் அவரை வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்னிசை நிகழ்ச்சி

முன்னதாக இளையராஜா பாடிய பாடல்களின் இன்னிசை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. இதில் முதல் பாடலாக ‘அமுதே… தமிழே… அழகிய மொழியே… எனதுயிரே…’, என்ற பாடலை இசைக்குழுவினருடன் இணைந்து இளையராஜா பாடி ரசிகர்களை உற்சாகமூட்டினார்.

இந்த பாடலின் சில வரிகளை இளையராஜாவுடன் கமல்ஹாசனும் இணைந்து பாடினார். அப்போது, ரசிகர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பாடல் முடிவில், கமல்ஹாசன் எழுந்து நின்று இளையராஜாவுக்கு கைகூப்பி நன்றி தெரிவித்தார்.

சரியாக 7.10 மணிக்கு சிம்பொனி தொடங்கியது. 5 பாகங்களாக சிம்பொனி இசைக்கப்பட்டது.

பின்னர் ‘ராஜா கைய வச்சா…’, ‘பூவே செம்பூவே…’, ‘கண்ணே கலைமானே…’ ஆகிய இளையராஜாவின் பாடல்கள் சிம்பொனி வடிவில் இசைக்கப்பட்டன.

இசைக்கலைஞர்களுக்கு நன்றி

சிம்பொனி நிறைவடைந்ததும் இளையராஜா மேடைக்கு சென்று அனைத்து இசை கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

பின்னர் தனது இசை பயணத்தில் தன் மனதை பாதித்த பாடலை பாடுகிறேன் எனக்கூறி ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் இடம்பெற்ற ‘இதயம் போகுதே…’ பாடலுக்கு சிம்பொனி இசைக்க அவர் கேட்டுக் கொண்டார். அதன்படி அந்த பாடலை சிம்பொனியாக இசைக்கலைஞர்கள் வாசிக்க, இளையராஜா பாடலை பாடி அசத்தினர்.

விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், ராஜ கண்ணப்பன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், நடிகர்கள் பிரபு, கார்த்தி, சத்யராஜ், நாசர், ரோபோ சங்கர், இசையமைப்பாளர்கள் கங்கை அமரன், யுவன் சங்கர் ராஜா, நடிகைகள் தேவயானி, இயக்குனர்கள் விக்ரமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நன்றி கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *