சிட்னி, டிச. 15:
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொடூர தாக்குதலை நடத்தியவர்கள் 50 வயதான நவீத் அக்ரம் மற்றும் அவரது 24 வயதான மகன் சஜித் அக்ரம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு பேருமே பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தந்தை, மகன் என்று தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாண்டி கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மிக மோசமான ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. அங்கு யூத நிகழ்ச்சி ஒன்று நடந்த நிலையில், உள்ளே புகுந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 16 பேர் உயிரிழந்தனர்.
பாண்டி கடற்கரையில் தந்தை – மகன் இருவர் சேர்ந்துதான் இந்த கொடூர தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. தந்தை 50 வயதான நவீத் அக்ரம் சம்பவ இடத்திலேயே அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் மகன் சஜித் அக்ரம் மருத்துவமனையில் படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று மாலை, யூத மக்கள் பங்கேற்ற ‘கடற்கரையோர ஹனுகா’ எனப்படும் நிகழ்வின் போது பாண்டி கடற்கரையில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இரண்டு போலீஸ் அதிகாரிகள் உட்பட 40 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இத்தாக்குதல் சிட்னியின் யூத சமூகத்தை இலக்காகக் கொண்ட யூத வெறி தாக்குதல் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நவீத் அக்ரம் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருந்தவர் என்றும், சட்டப்பூர்வமாகப் பல ஆயுதங்களைச் சொந்தமாக வைத்திருந்தார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
6 துப்பாக்கிகள் மீட்பு
நேற்று தாக்குதலுக்குப் பிறகு ஆறு துப்பாக்கிகள் மீட்கப்பட்டதை போலீசார் உறுதிசெய்தனர். தாக்குதல் நடந்த பகுதிக்கு அருகில், நவீத் அக்ரமின் வாகனத்தில் வெடிகுண்டு சாதனம் உட்படப் பல சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கண்டறியப்பட்டன. அதிகாரிகள் அவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.
துப்பாக்கிச்சூடு தகவலைத் தொடர்ந்து, இரவு 6:45 மணியளவில் பாண்டி கடற்கரை கேம்ப்பெல் பரேட் பகுதிக்கு அவசரகால சேவைகள் வரவழைக்கப்பட்டன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, போலீசார் அப்பகுதியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
![]()





