ஆவடி, ஜன. 21:
ஆவடி காவல்துறை கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா அதிரடி நடவடிக்கை காரணமாக 15 நாட்களில் 84 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
ஆவடி காவல் ஆணையரகத்தில் காவல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்ஹா, உத்தரவின் பேரில் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த 1–ந் தேதி முதல் 15–ந் தேதி வரை பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், குற்ற நடவடிக்கைக்காரர்களுக்கு எதிராகவும், கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிராகவும் காவல் துறையினரால் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
ஆவடி காவல் மாவட்டத்தில் 39 ரவுடிகள், செங்குன்றம் காவல் மாவட்டத்தில் 45 ரவுடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் குற்ற நடவடிக்கைக்காரர்களும் என மொத்தமாக ஆவடி காவல் ஆணையரகத்தில் 84 ரவுடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் குற்ற நடவடிக்கைக்காரர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், கஞ்சா தொடர்பாக 12 வழக்குகளில் 19 பேர் கைது செய்யப்பட்டு 25.55 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தும், குட்கா தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டு சுமார் 30.337 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. மேலும், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்றும் ஆவடி காவல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
![]()





