திருவள்ளூர், டிச. 3–
திருவள்ளுர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணனூர் ஜோதி நகர் பகுதியில் மழை வெள்ள நீர் வெளியேற்றும் பணிகள் தொடர்பாக அமைச்சர்கள் கே.என்.நேரு, சா.மு.நாசர் நேரில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:
முதலமைச்சர் ஆணையின்படி மாநிலத்தில் மழை நீர் தேங்கி நிற்காத வண்ணம் போர்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிகுட்டப்பட்ட பகுதியில் மழை நீர் வெளியேற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இப்போது அருகிலுள்ள ஏரியிலிருந்து நேரடியாக கால்வாய் கட்டினால் எந்த இடத்திலும் தண்ணீர் தேங்காது என்ற அடிப்படையில் 800 மீட்டர் தான் கால்வாய் கட்ட வேண்டியுள்ளது. மேலும், எந்த இடத்திலும் தண்ணீர் தேங்காத வண்ணம் அமைக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்படுகிறதோ அந்த இடத்தில் கால்வாய் கட்டப்படும். இனி எந்த காலத்திலும் மழைநீர் தேங்காத அளவுக்கு அமைக்கப்படும். ஏற்கனவே குடியிருப்பு பகுதிக்கு ரூ.27 கோடி வழங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மொத்தம் சென்னைக்கு குடிநீர் வழங்கும் மாவட்டங்களாக திருவள்ளூர், காஞ்சிபுரம் தண்ணீர் வழங்குகிறது. மழை அளவு சராசரி அளவே உள்ளது அதனால் அதிக அளவில் பாதிப்புகள் இல்லை ஆனால் திடீரென்று அதிகமாக மழை பெய்யும் போது ஒரு இரண்டு நாட்கள் நீண்ட நேரம் மழை பொழிந்தால் மழை நீர் தேங்கி நிற்கும். அதற்காக மோட்டார்கள் கொண்டு வந்து, சென்னையிலிருந்து மறுபடியும் அதிக அளவில் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரே நாளில் எல்லா தண்ணீரும் வெளியேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்நது, பூவிருந்தவல்லி வட்டம் சென்னீர்குப்பம் மாசிலாமணி நகர் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகள் தொடர்பாக கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மழை நீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இவ்ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் தா.கார்த்திகேயன், நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் ப. மதுசூதன் ரெட்டி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப், ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதய குமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் ரா.சரண்யா மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
![]()





