செய்திகள்

ஆருத்ரா தரிசன உற்சவம்: சிதம்பரம் நடராஜர் கோயில் இன்று கொடியேற்றம்

Makkal Kural Official

சிதம்பரம், டிச.25–

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு இன்று சிவாநாத் தீட்சிதர் கொடி மரத்தில் கொடியேற்றினார். ஜனவரி 2-–ந் தேதி வெள்ளிக்கிழமை தேர் திருவிழாவும், 3–ந் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனம் ஆகிய இரு திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து நாளை வெள்ளி சந்திர பிரபை வாகன வீதிஉலா, 27–ந் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா, 28–ந் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதிஉலா, 29-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், 30-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலாவும், 31-ம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும் நடக்கிறது. 2026 ஜனவரி 1-ம் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக் குதிரையில் வீதிஉலாவும் நடைபெறுகிறது.

2-ம் தேதி வெள்ளிக்கிழமை தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. 3ம் தேதி சனிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.

4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவும், 5-ம் தேதி திங்கள்கிழமை ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர். உற்சவ 10 நாட்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்சபை முன்பு மாணிக்கவாசகரை எழுந்தருளிச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *